Saturday 25 October 2014

Sunday, 19 October 2014

எதிர்பாராதவர்கள்


(இசை விரும்பிகள் XXII வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம் என்பதால் ஒரு திடீர் பதிவாகத் தோன்றியதே இந்த எதிர்பாராதவர்கள். இது ஒரு கதை. 70களின் துவக்கத்தில் அரசாங்க அலுவலராக இருந்த ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டரின்  கதை. )


                                  
                                          எதிர்பாராதவர்கள் 
                                 

             உயர்மட்ட உத்தரவு ஒன்று தன்னை இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வரும் என அந்த அதிகாரி நினைத்திருக்கமாட்டார்.  அயர்ச்சியைத் தரும் கரடு முரடான   பயணத்தின் இறுதியில் அவர் வந்து சேர்ந்த இடம் அவரை சற்று திடுக்கிட வைத்தது. ஏனென்றால் அவர் நின்று கொண்டிருந்த இடமும்   அவர் செல்ல வேண்டிய இடமும் இன்னும் சந்திக்கவேயில்லை. விசாரித்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு மாட்டுவண்டிக்காரன் சொன்னான்:  "அய்யா அதுக்கு இன்னும் ரொம்ப தொலவு போகனுங்க."

       காத்திருந்தவருக்கு சிறிது நேரத்தில்  ஒரு பஸ் கிடைத்தது.  எந்தவிதமான அராஜகங்களுக்கும், அநியாயங்களுக்கும்  உடன்படாத நேர்மை அவரை அந்த பஸ்ஸில் அமர்த்த  மற்றொரு சிரமமான பயணம் தொடர்ந்தது. முடிவில் உத்தரவில் இருந்த அந்த ரைஸ் மில்லுக்கு அருகே இறங்கி சற்று தூரம் நடந்த பின் அந்த இலக்கை  அடைந்தார். அது ஒரு சாயந்திர நேரம். பொதுவாக வேலைகள் முடிந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம்.இருந்தும் அந்த ரைஸ் மில் துரிதமாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

   மில்லுக்குள் புகுந்த  அந்த அதிகாரி  உடனே தன் அதிகாரக்  குரலில் அங்கிருந்தவர்களை அதட்டத் துவங்க,  அங்கிருந்த வேலையாட்கள் ஒன்றும் புரியாது திகைத்தனர்.  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். "போய் உங்கள் முதலாளியை அழைத்துக்கொண்டு வாருங்கள்." என்றார் அதிகாரி அதட்டலுடன். சற்று நேரத்தில் அங்கே மிகக் கடுமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதன் வந்தான்.  அவன் தோற்றமே அவனின் அதிகார மற்றும் பண பலத்தை துல்லியமாகச் சொன்னது.

    "நீதானா இந்த மில்லின் ஓனர்?" என்றார் அதிகாரி கடுமையாக. அவர் பயப்படவில்லை. 

     "ஆமாம்.  சார் நீங்க...? " என்றான் அவன் மிக பவ்யமாக. அவன்  நடிக்கவில்லை. 

   " நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர்.  நான் உன் மில்லில் என்ன நடைபெறுகிறது என்று ஆராய வந்திருக்கிறேன். உன் மில்லில் சட்டவிரோதமான காரியங்கள் நடப்பதாக  எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது."  என்றார் அவர் மிகவும் கோபமாக. 

    "அப்படியெல்லாம் இல்ல சார்.  இருந்தால் திருத்திக்கிறேன்." என்றவன் உடனே "டேய் சாருக்கு ஏதாவது குடிக்க கொண்டுவாங்க" என்று தன் பணியாளர்களை நிர்பந்தித்தான்.

  "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றவர் தொடர்ந்து "இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேலைக்காகாது. உனது ரெகார்டுகளைப் பார்க்கவேண்டும். கொண்டுவா." என்றார்.

       சிறிது நேரத்தில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. அதிகாரி அவற்றை கவனமாக ஆராய்ந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு காகிதங்களிலிருந்து கண்ணை எடுத்தவர்  அவனை நோக்கி," உனது ரெகார்டுகளில் நேர்மை இல்லை. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றன. நீ எதையோ மறைக்கப் பார்க்கிறாய் என்று மட்டும் புரிகிறது. மேலும் மாலையே மூடவேண்டிய மில்லை இரவு வரை நீ திறந்து வைத்திருப்பது சட்டவிரோதம். அது தெரியுமா உனக்கு?" என்று கறாராக வினவினார்.

        "இனிமே இப்படிச் செய்யமாட்டேன் சார். இந்த ஒருதடவ மட்டும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுருங்க." என்று அவன் பரிதாபமாகக் கேட்டான். வேண்டினான் என்று கூட சொல்லலாம்.

   "அப்படியெல்லாம் விடமுடியாது. நான் உன் மில்லை இப்போதே மூடப்போகிறேன். சாவியை நீ நாளை கோர்டில் தண்டனையாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்." என்றவர் அடுத்தே அதை  செயல்படுத்த ஆரம்பித்தார்.   அந்த மில் முதலாளியோ  அதிகாரியை தொடர்ந்து வந்து கெஞ்சியபடி இருந்தான். அவரோ மிகக் கண்டிப்பாக அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் பணியை சிரத்தையாக செய்து முடித்துவிட்டு சாவியை தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்ட பின்னர்   அவனைப் பார்த்து," நாளை நீ இதற்கான தண்டனையை செலுத்திவிட்டு உன் மில்லை திறந்துகொள். ஆனால் மீண்டும் இப்படிச் செய்யாதே." என்றார் கறாராக. இப்படிச் சொல்லிவிட்டு உடனே அந்த மில்லை விட்டு வெளியே வந்துவிட்டார் வேகமாக. 

     வெளியே வந்தவருக்கு அப்போதுதான் உறைத்தது அந்த இரவில்அந்த இடத்தில்  எந்த பஸ் வசதியும் கிடையாது என்பது. இப்போது அவர் சேரவேண்டிய இடத்திற்கான பஸ் நிலையம் வெகுதூரத்தில் இருந்தது. அதை அடைய அவர் மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் நடக்கவேண்டும். எப்படியும் நடுஇரவாகிவிடும். அதன் பின் பஸ் கிடைத்து வீடு அடைய ... நினைக்கவே ஆயாசமாக இருந்தது அந்த கறார் அதிகாரிக்கு.  அவர் பின்னாலே வந்த அந்த மில் முதலாளி அவரைப் பார்த்து ,"சார்,  நீங்க நடந்துபோற தூரமில்லை. கொஞ்சம் இருங்க" என்றவன் சற்று நேரத்தில் தடதடக்கும் புல்லெட்டில் அங்கு வந்து சேர்ந்தான். குழப்பமாக அவனைப் பார்த்த அவரை நோக்கி அவன் சொன்னான்:" ஏறிக்கங்க. நான் உங்களை பஸ் ஸ்டாண்ட்டுக்கு கொண்டுபோய் விடுறேன். இப்பவே ராவாயிடுச்சு"

   அந்த கறார் அதிகாரிக்கு வேறு வழியில்லை என்று தோன்றியிருக்கவேண்டும்.  எந்தவித மறுயோசனையுமின்றி அல்லது தயக்கமின்றி அந்த  மனிதனின் வண்டியின் பின்னே அவர் உட்கார்ந்து கொள்ள அவன் உடனே தன் புல்லெட்டை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தான். அதே  சிரமமான பாதையில் இப்போது அந்த இரவில் தான் தண்டித்த மனிதனுடன் அவனுடைய வண்டியில் சென்று கொண்டிருக்கும் வியப்பு கலந்த விபரீதத்தின் முதல் சுவடு கூட அவரைத் தொடவில்லை. கருமையான இரவில் அந்த வினோத புல்லெட் பயணம் தொடர்ந்தது. நீண்ட தொலைவு சென்றதும் ஒரு மூடப்பட்ட சிறிய கடையின் முன்  அவன் வண்டியை நிறுத்தினான். பின் சொன்னான், "சார், உங்க நல்ல காலம். அதோ ஒரு பஸ் நிக்குது.  அதில ஏறிக்கங்க.  உங்க ஊருக்கு சீக்கிரம் போயிரலாம்."

      முன்னால்  சற்று தொலைவில் ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அன்றைய தினத்தின் இறுதி பேருந்தாக இருக்கலாம்.

      அதிகாரி தங்களுக்கு முன் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த அந்தப்  பேருந்தை கண்டு அதில் அவசரமாக  ஏறிக்கொள்ள அவன் கீழே நின்றபடி,"போயிட்டு வாங்க சார். நாளைக்கு நான் பணம் கட்டிர்றேன்." என்றான். "இனிமே இப்படி நடக்காது." என்று முடிவாகச் சொன்னான். பஸ் ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு கிளம்பும் வரை அவன் அங்கேயே நின்றபடியிருந்தான். பஸ் கிளம்பி அந்தப் பக்கம் செல்ல, பின்னர் அந்த புல்லெட் தடதடக்கும் ஓசையுடன் அதற்கு எதிர்த் திசையில் விரைந்து சென்று  சடுதியில் ஒரு புள்ளியாக மறைந்தது.

      இந்தக் கதை எனக்குள் ஒரே ஒரு கேள்வியைத்தான் விதைத்தது. இப்படி நடக்க சாத்தியமா? காந்தி கொல்லப்பட்ட போது ஐன்ஸ்டைன் ," ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே பிற்கால சந்ததிகள் நம்பமாட்டார்கள்." என்று குறிப்பிட்டார். அதைப்போலவே இதை என்னால் நம்பமுடியவில்லை. 2014இலிருந்து 1970ஐப் பார்க்கும்போது சில விந்தையான உண்மைகளும் இப்போது காலாவதியாகிவிட்ட நேர்மைகளும், மலிந்துவிட்ட அதிகாரம் கொண்டவர்களின் அராஜாகங்களும்  இதை ஒரு வியப்புச் செய்தியாக பார்க்கவைக்கிறது. எதற்காகவும் தன் நேர்மையை சமரசம் செய்துகொள்ளாத அந்த அதிகாரியைப் போல் இன்றைக்கும் சிலர்   இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும்  ஒரு வெளிச்சத்தின் வேர்.

     தன் பணியைச் சரியாக  நியாயமாகச் செய்த அந்தத் துணிச்சலான அரசு அதிகாரி  நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். ஆனால்  என் மனதில் நிழலாடும் நபர் அந்த நேர்மையான கறார் செக்கிங் இன்ஸ்பெக்டர் அல்ல. மாறாக அந்த முரட்டு மில் முதலாளிதான்.   அதற்கான காரணத்தை நான் விவரிக்க வேண்டியதில்லை. அது புதுக்கவிதை ஒன்றுக்கு  விளக்கம் தருவது போன்று அபத்தமானது.  ஆனாலும் ஏதாவது  சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம்:

   அந்த அதிகாரி செய்தது அவருடைய பணி. அவன் செய்தது யாருமே எதிர்பார்க்காத மனிதாபிமானம்.

     மறைந்து போன அந்த மனிதம் இன்று ஒரு  வினோதம். ஒரு அபூர்வம். ஒரு தலைப்புச் செய்தி. அல்லது  "அவன் கூட போன  அந்த ஆளு ஒரு முட்டாளுனா அவர   பத்திரமா கொண்டு போய் சேர்த்த இவன் அவர  விட பெரிய முட்டாளா இருப்பான் போல" என்று இன்று நாம் செய்யும் ஒரு நகைச்சுவை. 

      இப்போது ஒரு சிறிய திருத்தம். பதிவின் துவக்கத்தில் இது ஒரு கதை என்று சொல்லியிருந்தேன். இல்லை. இது ஒரு நிகழ்வு. இதை நான் அறிந்தது வெகு சமீபமாகத்தான். இதில் சம்பந்தப்பட்ட அந்த அரசு அதிகாரியே  என்னிடம் இதை பகிர்ந்துகொண்டார். இத்தனை நேர்மைக்கும் நியாயத்திற்கும் அவருக்கு  கிடைத்த வெகுமதி இன்றுவரை அவர் ஒரு வாடகை வீட்டில்தான்  வசிக்கிறார் என்ற  முரண்  ஒன்றே.  அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் எனது தந்தை.


Thursday 9 October 2014

இசை விரும்பிகள் XXI -- அலங்காரம் கலையாத அழகு.



சில சந்தர்ப்பங்களையும் அனுபவங்களையும்  நாம் எவ்வித கலையுனர்வுமின்றி ரசிக்கத் தவறி சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். பால்ய நாட்களின் திரும்பி வராத இனிமையைப் போல அவைகள் திரும்பிப் பார்க்கப்படும் போதுதான் இன்னமும் அழகாகத் தெரிகின்றன. அப்போது நமக்கு ஏற்படுவது வெறும் அழகின் சுவை மட்டுமல்ல அதை சுவைக்கத் தவறிய வலியும்தான்.

                         

           எழுபதுகள்: அலங்காரம் கலையாத அழகு.


        பதிவைத் துவங்கும் முன் நாம் மறந்துவிட்டசில மகத்தான பாடல்களைக் குறித்துப் பேச  விரும்புகிறேன். முதலில்  ஒரு மாலை நேரத்து இளய  நிலவின் குளுமையை சில்லென்று நமக்கு கடத்தும் ஒரு பாடல். 72ஆம் ஆண்டு  வந்த மாப்பிள்ளை அழைப்பு என்ற படத்தின்   உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்  என்ற வி குமார் அவர்களின் இசையில் வெளிவந்த அற்புதமான பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? இணையத்தில் நீந்திச் சென்றுகொண்டிருந்த போது திடுமென இந்த இசைமுத்தை பல வருடங்களுக்குப் பிறகு கண்டெடுத்தேன். எத்தனை ரம்மியமான பாடல்! அடுத்த பாடல் இன்னும் சற்று பின்னோக்கிய காலத்தில் வந்தது. 67 ஆம் ஆண்டில் வந்த செல்வமகள் என்ற படத்தின் எம் எஸ் வியின் இசையில் பளீரென்று ஒரு காற்று நம்மை சுகமாக அறைவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நானிருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் என்ற பாடல். இதில் கானக் குயில் சுசீலாவின் குரல் உங்களுக்குள் சில வியப்பு விதைகளை விதைக்காவிட்டால் அந்த இசை அனுபவமே வீணாகிவிடுகிறது. குரலா, இசையா, கவிதையா எதை விவரிப்பது என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம். பழைய இசைதான் என்னென்ன விதமான எண்ண ஓவியங்களை மனதில் வரைகிறது! சிலர் எளிதில் இகழும் சாதாரண இசையமைப்புதான். இருந்தும் இதுபோன்ற சாதாரணங்கள் கொடுக்கும் பிரமிப்பு வார்த்தைகளைத் தாண்டியது.

   
      பழைய பாடல்கள் நம் குடும்ப உறவினர் போல ரத்தத்தில் கலந்து விட்ட மறக்க முடியாத பிணைப்புகளில் ஒன்று. இப்படியொரு  கருத்தை முன்பு ஒருமுறை படித்தபோது அதுவரை பழைய பாடல்களுக்கும் அதைக் கேட்பவருக்குமான தொடர்பு என்னவென்பதை எப்படிச் சரியாக வகைப்படுத்துவது என்ற  குழப்பத்திற்கு  ஒரு துல்லியமான விடை கிடைத்த திருப்தி எனக்கு உண்டானது. இது  எத்தனை உண்மை என்பது   ஆன்மாவை மீட்டெடுத்து பலவகையான பசுமையான நினைவுகளை உயிர்ப்பிக்கும் பழைய பாடல்களைக் கேட்கும்போதுதான் புரிகிறது.  அவைகளை மீண்டும் கேட்கும் போது நமக்கு ஒரு இனம் புரியாத இணைப்பின் இன்பம் வருவதின் பின்னே இருப்பது இந்த உண்மையாகத்தான் இருக்க முடியுமென தோன்றுகிறது. ஏனென்றால் பழைய பாடல்களை  நாம் வெறும் பாடல்களாக மட்டுமே பாவிப்பதில்லை. அதையும்  மீறிய ஒரு பிணைப்பு அந்த இசையின் ஊடே ஒரு மெல்லிய நூலிழை போல நம்மையும் நம் நினைவுகளையும் ஒரு சேர சேர்த்துத் தைக்கிறது. விழித்துக்கொண்ட மனமோ உள்ளுக்குள் இன்னும் ஆழமாகப் பார்க்கிறது.  ஒரே  வரியில்  ஆன்மாவை கண்டெடுக்கும் இந்த இணைப்பை விவரிப்பதென்றால் இப்படிச் சொல்லலாம்:  பழைய பாடல்கள் நமது நினைவுகளின் நீட்சி.

       எம் எஸ் வி யின் தேன் மதுர கானங்களை நான் காலம் தாண்டி ரசிக்கக் கற்றுக்கொண்டாலும் அவரது பாடல்கள் என் மனதிற்குள் மழைத்துளி போல விழுந்து  என் ரசிப்பின் மேன்மைக்கு உரமேற்றியவைகள்  என்பதில் மாற்றுக் கருத்து  இல்லை. உதாரணமாக ஒரு முறை வட மாநிலத்தில் மிகத் தனிமையாக உணர்ந்த ஒரு பொழுதில் பழைய கசெட்டுகளில் ஒன்றை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அப்போது நான் கேட்ட ஒரு பாடல் எனக்கு ஒரு நதியின் ஆனந்த அலைகளின் மீது பயணம் செய்யும் உணர்வை கொடுத்ததோடு  என் வாழ்க்கையில் அந்த சமயங்களில்  அறுபட்டுப் போயிருந்த என் பழைய உணர்வுகளின் உயிர்ப்பை உறுதி செய்தது. அந்தப் பாடல் ஆண்டவன் கட்டளை படத்தின் இசைச் சிற்பம் என நான் வர்ணிக்கும் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் என்ற பாடல்.  இதைக் கேட்ட நேரத்தில் என்னிடம் திரும்பி வந்த பல விவரிக்க முடியாத நினைவலைகள் உணர்வுகளின் சங்கமமாக என்னை வசப்படுத்தின. இதே உணர்வு உங்களுக்கும் பல பாடல்களைக் கேட்கும் சமயத்தில் வருவது இயற்கையே. ஆனால் இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால் இந்தப் பாடல் வெளிவந்த போது நான் பிறக்கவேயில்லை. பள்ளிப் பருவத்தில் ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு எனக்கும் இப்பாடலுக்கும் இடையே உள்ள உறவு அதிகமில்லை. இருந்தும் இந்தப் பாடல் எனக்குள் செலுத்திய உணர்வுகள் எண்ணங்கள் வெறும் நாஸ்டால்ஜிக்  என்பதையும் மீறி காலத்தைத் தாண்டிய ஒரு அனுபவமாகவே எனக்குத் தோன்றுகிறது. இதையே நான் ஒரு காவியப் பாடலுக்கான முதன்மையான தகுதியாகப் பார்க்கிறேன்.

          இணையத்தில் உலா வந்தபோது ஒரு "இசை வித்தகர்" சொன்னதை படிக்க நேர்ந்தது. இவர் அன்னக்கிளியே தமிழில் வந்த முதல் படம், அதற்கு முன் தமிழர்கள் தமிழ்ப் பாடல்களையே கேட்காதவர்கள், 76 க்குப்பிறகுதான் தமிழ் பாடல்கள் வந்தன என்று புரட்டு செய்யும் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் சொல்லியிருக்கும் கருத்தைப் படித்தாலே உங்களுப் புரியும்.

------------அடுத்து பொதுவாவே ஏ.ஆர் புதுமையாகவும் ஒன்றும் செய்ய வில்லை.. எப்போதும் 40/100 மார்க் மாணவர்தான் .மேலோட்ட ரசிகர்களுக்கு அவர் இசை புயல் .பெரிய பெரிய கருவிகளை வைத்துக்கொண்டு “மெல்லிசை” போட்டுக்கொண்டிருக்கிறார்... 
அல்லது யூஸ் அண்ட் த்ரோ இசை.
இது தவிர ஏ.ஆர்.ஐ Digitalised MSV என்று சொல்லலாம் Digitalised MSV . என்று சொல்லும் போது எம்.எஸ்.வியை குறைவாக மதிப்பிடவில்லை (ஆனால் MSVன் கடைசி பத்து ஆண்டு இசை துரு பிடித்துதான் போயிற்று)
(”காற்றுக்கென்ன் வேலி” பாட்டு (படம்-அவர்கள்) MSVன்
அமர்க்களமான இசை.அந்த டிரெண்டை தொடர்ந்த்திருந்தால்
டிரெண்டு மாறி இருக்கும்.)
இது தவிர ஏ.ஆர்ன் சில பாடல்கள் , எம்.ஸ்.வி.ன் பழைய பாடல்களுக்கு ”பில்டு அப்” கொடுத்து போடப்படடது. சொந்த சரக்கு இல்லை.-------------

          இதைச் சொல்வது ஒரு இளையராஜா ரசிகராகத்தான் இருக்க முடியும் என்பது  எந்த விதமான யூகத்தையும்  தாண்டிய நிதர்சனம். மெல்லிசை என்பதை மிகச் சாதாரணமான அதிகமான வாத்தியங்கள் இசைக்கப்படாத வெறும் இசை எனவும் , மெல்லிசையை மெலிந்த இசை என குதர்க்கமாக திரிக்கவும்  முயலும் இந்தச் சிந்தனை ஒரு பலத்த ஆய்வுக்கு உட்பட்டது. முதலில் இவர் பகடி செய்யும் மெல்லிசை என்ன என்பதை நாம் சற்று ஆராய்வோம்.

             ஒரு வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருந்த நமது பாரம்பரிய கர்நாடக இசை அறுபதுகளில் பாமரர்களும்  சுலபமாக  ரசிக்கும் எளிமையின் வடிவம் பெற்றது ஒரு ஆச்சர்யம். பின் அது  மெல்லிசையாக மாறி நமது இசை தாகத்துக்கான நீரூற்றுகளாக பொங்கிப் பிரவாகமெடுத்தது ஒரு வியப்பான காவிய நிகழ்வு. இது  அணையில்லாத வேகத்தில்  புதுவெள்ளமாகப் பாய்ந்தது
ஒரு இசைச் சரித்திரம்.  இதன் நீட்சியாக  எழுபதுகளில்  இந்த மெல்லிசை புதிய சாலைகளை அமைத்துக்கொண்டது ஒரு மகத்துவம். இந்த மெல்லிசை எப்படி சாத்தியமானது என்பது பாதைகளில்லாத இடங்களில் சாலைகளை அமைத்தவர்களின் ஆண்டாண்டு காலமான உழைப்பே.

       மெல்லிசை என்பது திடமான அடர்த்தியான கர்நாடக ராகத்தின் எளிமையான வடிவம். ஒரு சாராருக்கு மட்டுமே ஏதுவாகவும் அவ்வாறான இசைப் பண்டிதர்களின் இசை உணர்ச்சிக்கு உணவாகவும் அடிமைப்படுத்தப்பட்டு   ஒரு வட்டதிற்குள்  சிக்கிக்கொண்டுவிட்ட கர்நாடக இசையை (தமிழிசையே கர்நாடக இசையாக உருமாறியது என்ற கருத்தும் உண்டு.)  அதன் அழகுணர்ச்சி சிதையாமல்  அதைக் கேட்டு  பாமரனும் தலையாட்டும் இசை ரசனைக்கான புதிய நவீனத் தோற்றமே மெல்லிசை.  இது எப்படியென்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகப் புகழ் பெற்ற எளிதில் யாருக்கும் புரியாத Theory Of Relativity என்ற விஞ்ஞான விதியை "நீ உன் காதலிக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகவும் காதலியுடன் இருக்கும்போது ஒவ்வொரு யுகமும் ஒரு நிமிடமாகவும் மாறிப்போகும்" என்று சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் சொல்வதைப் போன்றது.  இன்னும் சுலபமாக சொல்வதென்றால் குழந்தைகளுக்கு கசப்பு மருந்தை ஊட்டும் போது அதில் தேனைக் கலந்து கொடுக்கும் தந்திரம் போன்றது இது.  ஐம்பதுகள் முதல் அறுபதுகளின் ஆரம்பம் வரை இந்த இசைச் செதுக்கல்  படிப்படியாக நமது தமிழ்த் திரையிசையில் முன்னெடுக்கப்பட்டு செங்கல் செங்கலாக உருவாக்கப்பட்ட இசை மாளிகைதான் இந்த மெல்லிசை.  இந்த மகத்தான பணியை சிறப்பாகச் செய்த பல இசை அமைப்பாளர்களின் இசை மேதமையையும் அவர்களின் சிரத்தையான உழைப்பையும் சட்டென காலில் போட்டு மிதித்துவிட்டு, இவ்வாறான கட்டுமானங்கள் முடிந்து இசைக் கோவில்கள் கட்டப்பட்ட பின்னர் எதோ ஒரு சிலையை உள்ளே திணித்து இதுதான் இசைக் கடவுள் என்று உண்மையை உடைப்பது ரொம்பவும் முதிர்ச்சியற்ற போக்கு இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் ..மடத்தனமானது.

     மேற்கத்திய இசை பாரம்பரியத்தில் இவ்வாறான மெல்லிசை எனப்படும் light music 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தன் பரிமாணத்தை வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டது.  ஐரோப்பாவின் ஆணவம் மிக்க மேல்தட்டு மக்கள் ஆராவாரமாக ரசித்துக்கொண்டிருந்த சிம்பனி என்னும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் நுட்பத்தை, இசை மேதமையினால் விளைந்த இசைக் குறிப்புகளின் மீது கட்டப்பட்ட  சிம்பனியின் மகத்துவத்தை சிறிய இசைத்  துணுக்களாக மாற்றி   every Tom Dick and Harry யும் விரும்பும் வண்ணத்தில்  அதை சாமானியர்களின் அருகே கொண்டு சென்றது மேலே உள்ள சிலர் பகடி செய்யும்  light music எனப்படும்  மெல்லிசையே. ஒரு சமூகத்து  மேட்டுக்குடியின் பாரம்பரிய இசை ரசனையையும்  அதே சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின்  நடைமுறை இசை ரசனையையும் எதுவும் எதையும் மீறாத அளவில் சரியான விகிதத்தில் கலந்து ஒரு மேன்மையான இசையனுபவதிற்காக உருவாக்கப்பட்டதே இந்த மெல்லிசை என்னும் அற்புதம். இது நடந்திருக்காவிட்டால் மேற்கத்திய உலகில் என்ன மாறியிருக்கும் என்று  துல்லியமாக வரையறுக்க முடியாவிட்டாலும் நமது தமிழ்த் திரை இசையைப் பொருத்தவரை இந்த மெல்லிசையின் நிகழ்வு சாத்தியமாகியிருக்காத பட்சத்தில் இங்கே இளையராஜாவும் இல்லை ரஹ்மானும் இல்லை என்பதே உண்மை. பாதைகளே இல்லாத வெளிகளில் சாலைகள் அமைத்தவர்களை ஒரு நாலாந்தர நக்கலுடன் ஓரங்கட்டிவிட்டு   அவ்வாறான சாலைகள்  உருவாகி அதில் பயணம் செய்து காலம் காலமாக தமிழ் நெஞ்சங்களை காதலுடன் கட்டியணைக்கும் கணக்கில்லா பல கானங்கள் இன்றளவும் இறவாமல் தங்களின் இருப்பை அமைதியாக உணர்த்திக்கொண்டிருக்க இதன் பின் வந்தவர்கள்  தங்கள் வண்டிகளை அதே சாலைகளில் இலகுவாகவும் ஒய்யாரமாகவும்  ஓட்டிச் செல்ல அவர்களை  அளவுக்கு மீறிப் புகழ்வது எனது பார்வையில் நலிந்த  செயல். இசையின் பன்முகத்தன்மை நம்மை அதிசயத்திலும், ஆச்சர்யத்திலும், வியப்பிலும், திகைப்பிலும் சில சமயங்களில்  அதிர்ச்சியிலும் ஆழ்த்தக்கூடியது. அதன் மாற்றம் நமது புலன்களுக்கு தெரியாத வண்ணமாகவும்  சமயத்தில்   புரிபடாத  ஒரு திடீர் காட்சி  போலவும் வெளிப்படக்கூடியது. 

    மெல்லிசையின் ஆத்மாவை  அறியாமல் இதைப்போன்ற புரையோடிய கருத்துக் குப்பைகளை தாராளமாக அள்ளிவீசுபவர்களின் பக்குவமில்லாத  அடுத்த வெற்றுக்கூச்சல் எம் எஸ் வியின் இன்னிசையின் இனிமை  அவருடைய அந்திம காலங்களில் சோடை போனது என்பது. மேலே இப்படியான ஒரு கருத்தைச் சொன்னவர் பொத்தாம்பொதுவாக எம் எஸ் வி யின் கடைசி பத்து வருடங்கள் என்று ஆதாரமில்லாத அபத்தத்தை உதிர்த்துவிட்டு உடனே  ரஹ்மானை துவைத்துப்போட சென்றுவிடுகிறார். அது எந்த பத்து வருடங்கள் என்பதை மட்டும் நம்முடைய அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இது வழக்கம்தான். 70களின் எம் எஸ் வி யின் இசை எவ்வாறு ராக அலைகளாக சுழன்றடித்தது என்பதை தமிழகமே அறியும். ஒருவேளை அன்னக்கிளி வந்த 76ஆம் ஆண்டிலிருந்து இந்த கணக்கை எடுத்துக்கொண்டாலும் அதுவுமே உண்மைக்கு முரணானது. வெற்று ஓசைகளிலும், கண நேரத்திற்கு நமது கவனத்தை கவரும் துடிப்பான இசையை  தருவதையும்   தவிர்த்து தான்  அதுவரை கடந்துவந்த பாரம்பரியத்தின் வேர்களை இழக்காத இசையை இறுதிவரை எந்தவித சமரசங்களுக்கும் உட்படாமல் கொடுத்துவந்த ஒருவரை கேட்கவே கூசும்  நாலாந்தர இசை வடிவங்களை   பிரபலமாக்கி தமிழிசையின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒருவருடன் ஒப்பிட்டு பேசுவது அபத்தமானது. இருந்தும் அவருக்குப் பின் இவர் வந்த ஒரே காரணத்திற்காக  இந்த ஒப்பீடு சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. 

           இப்போது நாம் பார்க்க இருப்பது 1972இல்  பட்டி தொட்டியெங்கும் வெடி போல ஒலித்த ஒரு படத்தின் பாடல்களை. அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு  என்று ஆரம்பித்தாலே அந்தப் பாடலின் துடிப்பான தாளம் நம்மை உடனே ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு நண்பர் மச்சானைப் பார்த்தீங்களா பாடல்தான் முதல் முதலாக நாட்டுப்புற இசையின் குதூகலத்தை தமிழர்களுக்கு உணர்த்தியது என்று சொல்லப்போக அந்த மதீயீனமான  கருத்தின் மீது ஆணியடித்தது இந்தப் பாடல். பட்டிக்காடா பட்டணமா படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் குதித்து உற்சாக கும்மாளம் போட்டவை என்பதை இங்கே நினைவில் கொள்வது அவசியம். உதாரணமாக எம் எஸ் வி அனாசயமாக மேற்கத்திய இசையை நமது நாட்டுப்புற தாளத்துடன் சேர்த்து அதகளம் செய்த கேட்டுக்கோடி உருமி  மேளம் என்ற பாடலை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் அதில்  அவர் செய்திருக்கும் நவீனம் நம்மை வியக்க வைக்கும். கிராமத்து நாயகன் தன் மண் சார்ந்த பெருமையை பாடத்துவங்க அந்தப் பல்லவிக்கு எம் எஸ் வி கிடார் மற்றும் ட்ரம்ஸ் என தடதடக்கும் மேற்கத்திய இசையை பின்னணியில் அமைத்து நகரத்து நாயகி We shall meet at the garden gate என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்க பின்னணியில் நம் நாட்டுபுற வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமான  தாளத்துடன் அந்த மேற்கத்திய உருவத்தை அப்படியே வாரிச் சுருட்டி விழுங்கி விட எஞ்சி நிற்பது ஆனந்த வியப்பே. இந்த மரபை மீறும் பாணி அல்லது இசைப் புரட்சி பாடல் முழுதும் நம்மை தொந்தரவு செய்யாமல் ரசிப்புடன் மானசீகமாக குதித்து ஆடவைக்கிறது. M.S.V's choice of musical layers is not disturbingly dominant but subtly sensuous.  மேலை நாடுகளில் டப்பாங்குத்து பாடலைப் பாடும் அலங்காரமான வெளிப்பூச்சு எதுவுமில்லாத ஒரு உன்னதமான இசை ரசனைக்கான பாடலிது. இதே படத்தின் நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று என்ற பாடல் மற்றொரு மனதை கவரும் கானம். இதில் இசைக்கப்படும் கிடாரின் இன்னிசை கேட்பதற்கு அலாதியானது. 
         
   பால்ய வயதில் நண்பர்கள் சூழ வாழ்ந்த தினங்களில் எத்தனை இன்பங்கள் அருவி போல பருகக் கிடைத்தாலும் அவற்றை நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. Abundance and availability make us feel regret the moments we failed to cherish when they were around. 78 இல் வந்த அவள் தந்த உறவு என்ற படத்திலுள்ள இந்தப் பாடல் இதை எத்தனை அழகாகச் சொல்லிவிடுகிறது. நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது. நமது ஞாபக மண்ணில் புதைந்துபோன பொக்கிஷப் பாடல். காதலிக்கு பதில் இசை என்று வைத்துக்கொண்டால் இது சரியே என்று தோன்றுகிறது. எஸ் பி பியின் இளமை துள்ளும் குரலும் அப்போது ஆர்ப்பரிப்பைக் கொடுத்த அவரது ஒ ஒ ரிமெம்பர் என்ற ஆங்கில உச்சரிப்பும் ஒரு பசுமையான இலையாக நெஞ்சத்தில் துடிக்கிறது.  ஏன் இதுபோன்ற இசை முத்துக்களை மறந்தோம் என்ற சுய ஊசிகள் நம்மைக் குத்துவது இவைகளுடன் நமக்குக் கிடைக்கும் வலிகள்.

      இதே உணர்வை அளிக்கும் மற்றொரு வைர கீதம் என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம் வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம் என்ற மிக மகத்துவமான இனிமையை இசையாக கொட்டிய பாடல். எழுபதுகளின் முத்திரை என்ற பட்டியலிட்டால் அதில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இந்தப் பாடல் இருக்கும் என்பது நிச்சயம். ஒரு முறை இதைக்  கேட்டுவிட்டால் பிறகு நாள் முழுதும் மனதில் அணையாத விளக்காக எரிந்துகொண்டே இருக்கும் பாடல்.  கேட்கும் முதல் நொடியிலேயே கானக் குயில் சுசீலாவின் மந்திரம் போர்த்திய குரலும் எம் எஸ் வியின் ராகத்தை விட்டு விலகாத தாளமும் நம்மை வசியம் செய்துவிடுகின்றன. பிறகு டி எம் எஸ் பாடத்துவங்கியதும் நாட்டுபுற தாளத்துக்கு மாறும் பாணி பின் சுசீலா மீண்டும் தொடரும் போது எந்தவித இடைஞ்சலில்லாமல் மேற்கத்திய தாளம் போட்டுக்கொள்வது அபாரமான இசைச்  சுழற்சி. இந்தப் பாடல் அவன் ஒரு சரித்திரம் என்ற படத்தில் வருவதாக ஒரு தவறான தகவல் இணையத்தில் இருந்தாலும் உண்மையில்  இது1977 இல் வந்த பெருமைக்குரியவள் என்ற  படத்தின் பாடல். 

     இது பெய்ட்டோவன் (தமிழில் பீத்தோவன் என்பார்கள் தவறுதலாக.) என்ற இசை அதிசயத்தின் Fur Elise என்ற இசைத் துளியின் நகல் என்ற தகவல் இருக்கிறது. உண்மையில் பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய துணுக்கே இந்த அற்புதப் பாடலை ஒரு மேற்கத்திய நகல் என்று சொல்லத்தூண்டுகிறது. மற்றபடி இந்தப் பாடல் செல்லும் திசையே வேறு. கண்டிப்பாக இது ஒரு பிரதியெடுக்கப்பட்ட பாடலல்ல. இங்கே சில உண்மைகளை வெளிச்சத்துக்கு அழைத்துவருவது அவசியம் என்றுனர்கிறேன்.  யாதோங்கி பாரத் என்ற ஹிந்திப் படம் நாளை நமதே என தமிழில் எடுக்கப்பட்டபோது அதில் எம் எஸ் வி இசையமைக்க மறுத்துவிட்டார். பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் யாரும் மறுப்பே கூற முடியாது. ஆனாலும் எம் எஸ் வி இசையமைக்க விரும்பாததின் காரணம் மூலப் படத்தின்  ஹிந்திப் பாடல்களையே தமிழில் அமைக்கும்படி தான் நிர்பந்த்திக்கப்படுவோம்  என்ற எண்ணமே. ஆனால் அவ்வாறில்லாமல் தமிழில் புது மெட்டுகள் அமைக்கலாம் என்ற உறுதிமொழிக்குப் பிறகே எம் எஸ் வி இதில் இசையமைத்தார். ஆச்சர்யமாக நாளை நமதே படத்தின் பாடல்கள் ஒன்றுகூட அந்த ஹிந்திப் படத்தின் சாயலைக் கொண்டிருக்காது என்பதை இந்த இரண்டு படத்தின் பாடல்களைக் கேட்டவர்கள் உணர்வார்கள். மேலும் ஆராதனா என்ற ஹிந்திப் படம் சிவகாமியின் செல்வன் என்றானபோதும், பிரமச்சாரி எங்க மாமாவாக வந்தபோதும் பாடல்களில்  எம் எஸ் வி தன் சுய முத்திரையையே பதித்தார். இதில் பில்லா, தில்லு முல்லு, தீ போன்ற படங்களும் அடக்கம். பட்டியல் நீளும் சாத்தியம் இருக்கிறது. எனவே இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன்.

      72 இல் வெளியான  சுடரும் சூறாவளியும் என்ற படத்தில் வரும் அன்பு வந்தது என்னை ஆள வந்தது என்ற சுகமான கீதம் எஸ் பி பி யின் ஆரம்பகாலத் தேன் துளிகளில் ஒன்று. இதைக் கேட்டவர்கள் அல்லது இப்போது கேட்பவர்கள் இதை உணர்வார்கள். இதைக் கேட்கும்போது உங்களுக்கு அந்த கால வானொலி தினங்கள் ஞாபகம் வராவிட்டால் நீங்கள் சில முதல் அனுபவங்களை  இழந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்  என்று அர்த்தம்.

     73இல் மணிப்பயல் என்றொரு படம் வந்தது. இதில்தான் தங்கச் சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ என்ற அலாதியான கானம் இருக்கிறது. பாடகர்  ஜெயச்சந்திரனின் ஆரம்பகாலப் பாடல்களில் ஒன்று. டேப் ரிகார்டர் வந்த பிறகு  இந்தப் பாடலை மட்டும் ஒரு கசெட் முழுதும் பதிவு செய்து சலிக்காமல் கேட்ட ஒரு உறவினர் எனக்குண்டு. சிலருடைய இசை விருப்பங்கள்தான் எத்தனை வினோத வடிவங்கள் பெறுகின்றன? தவிர்க்க முடியாத கானம்.  இதை பலமுறை கேட்டிருந்தாலும் படத்தில் ஏ வி எம் ராஜன் பாடுவார் என்று சற்றும் எண்ணவில்லை.

     74இல் ஜெயலலிதாவின் 100வது படம் திருமாங்கல்யம் வெளிவந்தது. படம் ஓடியதா இல்லையா என்ற விபரம் தெரியவில்லை.  பொன்னான மனம் எங்கு போகிறது சொல்லுங்கள் மேகங்களே என்றொரு நளினமான கீதம் இதிலுண்டு. ஒன்றிரண்டு முறைகள் வானொலியில் கேட்டதோடு சரி. இதன் பின் தற்போதுதான் மீண்டும் இந்தப் பாடல் என் செவிகளில் விழுந்தது. இதே படத்தின் மற்றொரு நல்லிசை கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே என்ற பாடல். அருமையான ராக வார்ப்பு.

         76இல் வந்த ஒரு படம் முத்தான முத்தல்லவோ. படம் வெற்றி பெற்றதாக எனக்கு நினைவில்லை.  ஏனென்றால்  இந்தப் படம் வந்த சுவடே அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் இதிலுள்ள சில பாடல்களை குறிப்பிட்டால் இந்தப் படம் பற்றிய ஒரு திடீர் ஞாபகம் உங்களுக்கு வரலாம். நான் குறிப்பிடும் முதல் பாடலைக் கேட்டபோது 70களின் வானொலி தினங்கள் மனதில் மறுபடி உயிர்பெற்றன. எஸ் பி பி பாடிய மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் என்ற பாடலை  யு டியூபில் காண நேர்ந்தது. பாடலே ஒரு சுகம் என்றால் இதில் நடித்த தேங்காய் சீனிவாசனின் முக பாவனைகளும் சேஷ்டைகளும் அற்புதம்.இப்படியொரு பாடல் அப்போது வந்தது என்ற நினைவே இதை கேட்கும்போதுதான் மீண்டும் எழுந்தது. இதே படத்தின்  பாலபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ பாடல் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்ட கான  ஊற்று. பாடலை முழுதும் உள்வாங்கினால் இதன் வசீகரத்தை உணரந்துகொள்ள முடியும். இதே படத்தின் சிறப்பான மற்றொரு பாடல் எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள். இதை ஒரு ராஜா ரசிகர் முன்பு ஒருமுறை எனக்கு வந்த பின்னூட்டத்தில் கடுமையாக சாடியிருந்தது என் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடல் வந்தபோதே எங்கள் நண்பர்கள் குழுமத்தில் தேங்காய் சீனிவாசன் பாடும் பாட்டு இது என்ற அறிமுகத்துடன் நாங்கள்  இதை நக்கல் செய்வதுண்டு. அந்த சிறுபிள்ளைத்தனத்தைத் தாண்டி யோசித்தால் எம் எஸ் வி மற்றும் எஸ் பி பி சேர்ந்து பாடிய அபூர்வமான பாடல் இது என்ற நிறம் இதற்க்கிருப்பதைக்  காணலாம். பகடி செய்யப்பட்டாலும் இசையின் அழகு குலையாமல் கரகரப்பான குரலில் எம் எஸ் வி சிறப்பாக பாடியிருப்பது இதனை இன்னும் மெருகேற்றுகிறது.

     1978 இல் வந்த ஒரு திரைப்படம் அதுவரை நாயகனாக வலம் வந்த ஒரு நடிகரை  ஒரே நொடியில் கீழே வீழ்த்தியது. அது வண்டிக்காரன் மகன் என்ற கருணாநிதியின் கைவண்ணத்தில் வந்த திரைப்படம். நீண்ட நாட்களுக்குப் பின் கருணாநிதியின் வசனத்தில் வந்த இந்தப்படம் (எம் ஜி ஆர்  முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பின் கருணாநிதி கலைத் துறைக்கு மீண்டும் வந்த படம் இது.)  150 படங்கள் கதாநாயகனாக சிம்மாசனத்தில் இருந்த ஜெய் ஷங்கர் என்ற மனிதாபிமானம் மிக்க ஒரு  நடிகரின் நடிப்புல வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. வினோதம் என்னவென்றால் வண்டிக்காரன் மகன் படம் பெரிய வெற்றி பெற்றது என்பதுதான். எம் ஜி ஆர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் மக்கள் மத்தியில் அவர் கதாநாயகனாகவும் அவரை எதிர்த்தவர்கள் எதிரிகளாகவும் (பெரும்பான்மையானவர்களால்) பார்க்கப்பட்டார்கள்.   எம் ஜி ஆர் ஆட்சியில் கருணாநிதி மீண்டும் திரைப்படத் துறைக்கு வந்த முதல் படம் வண்டிக்காரன் மகன். கருணாநிதி தன் எழுத்தின் வலிமையால்  எம் ஜிஆர் என்ற தன் நண்பதெரியை (ஆங்கிலத்தில் frenemy (friend+enemy) என்று இப்போது அழைக்கப்படும் ஒரு பதத்தின் உறுதிசெய்யப்படாத தமிழாக்கம்.) வசைபாடும் பல சாட்டையடி வசனங்கள் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்று கருத்தப்படுகிறது. எனவே இதில் நடிக்க பல நடிகர்கள் அப்போது தயங்கியதாக நான் படித்திருக்கிறேன். இதில் துணிச்சலாக நடித்த ஜெய்ஷங்கர் ஒரு மிகப் பெரிய விலையை இதற்காக கொடுக்கவேண்டியதாக இருந்தது. அது இதுதான்: இதன் பின் ஜெய் ஷங்கரின் திரையுலக வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது. பல அரசியல் காரணங்கள் அவரின் திரையுலக பயணத்தை மீண்டும் எழ விடாது செய்தாலும் அவர் இந்தப் படத்தில் நடித்ததை கொஞ்சம் பலத்த ஆலோசனைக்குப்பின் ஏற்றிருக்கலாம் என்ற ஒரு எண்ணம் அவரது ரசிகர்களுக்கு உண்டு. இந்தப் படத்தில்  ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே அதை நான் சொல்ல வந்தேன் பாட்டிலே என்ற பாடல் தி மு க பார்வையில் அன்றைய எம் ஜி ஆர் ஆட்சியை பரிகாசம் செய்தது. இதை எம் ஜி ஆரின் பல கொள்கைப் பாடல்களை எழுதிய வாலி எழுதியதும் அதற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்ததும் ஒரு வியப்பான உண்மை. கொஞ்சம் அரசியலை தூரவைத்துவிட்டு இந்தப் படத்தில் வைரம் போல் ஜொலித்த அருமையான மெலடியான ஒரு பாடலைப் பார்ப்போம். அது மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே  என்ற மிகச் சிறப்பான பாடல்.  எஸ் பி பி- வாணி ஜெயராம் இருவரின் குரல்களும், மனதை கொள்ளைகொள்ளும் பல்லவியும், நேர்த்தியான செதுக்கப்பட்ட இசையும் இந்தப் பாடலை நிரந்தரமாக நம் நெஞ்சில் உட்காரவைத்துவிடுகின்றன.

     70களில்  வந்த பல கானங்கள் அற்புதம் கலந்த ஆனந்த அனுபவங்கள். அவற்றை நான் முதலில் கேட்ட சமயத்தில் எழுந்த சிலிர்ப்பு பிறகு எனக்கு உண்டான  வேறு இசை நாட்டத்தினால் சட்டென அடங்கிவிட்டாலும் அவை நெருப்புக் கங்குகள் போல என்னுள் உயிருப்புடனிருப்பதை எந்தப் புதிய இசையாலும்  அணைக்க முடியவில்லை. குறிப்பாக எம் எஸ் வி - சிவாஜி இணைப்பு ஒரு மேகத்தீண்டல்.  
    
        அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்- ரோஜாவின் ராஜா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மென்மையின் மறுவடிவம். அலங்காரம் கலையாத அற்புத இசை. இதுபோன்று மெழுகு போல உருகும் பல கீதங்கள் எம் எஸ் வி யின் இசை ஆச்சர்யங்களில் அடக்கம்.

    அடுத்து வருவது மிகப் பெரிய புகழடைந்த, அப்போது வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பான  சுவையான டாக்டர் சிவா படத்தின்  மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய்.   எத்தனை முறை   என்ற கணக்கில்லாது தினமும் எதோ ஒரு அலைவரிசையில் இது ஒலித்துக்கொண்டே இருக்கும். ஜேசுதாஸின் வெற்றி நோக்கிய பாதையில் அவருக்குக் கிடைத்த அடுத்த ஏணிப்படி இப்பாடல். பாடல் வந்த சமயத்தில் என் நண்பனொருவன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் என இடைவிடாது மந்திரம் போல உச்சரித்துக் கொண்டேயிருப்பான். அதன் அர்த்தம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

    77இல் அவன் ஒரு சரித்திரம் என்ற படம் வந்தது. எதோ ஓடியது என்று ஞாபகம். ஆனால் இதன் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை. அம்மானை என்ற பாடல் ஒரு இசைத் தாலாட்டு.  அம்மானை அழகு மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடிவரும் பெருமானை எனத் துவங்கி பின் ராக தாளங்களில் குதித்து வாணி ஜெயராமின் வெள்ளிக்குரலில் இந்தப் பாடல் ஓடுவதைக் கேட்டால்  ரம்மியமான அமைதி கிடைப்பது நிச்சயம். மாலையிட்டான் ஒரு மன்னன் அங்கு  மயங்கி நின்றாள் ஒரு அன்னம் என்ற பாடலும் சிறப்பாக வார்க்கப்பட்டது. படத்தின் உயிர்நாடியான வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே எல்லோரின் உதடுகளிலும்  உட்கார்ந்த பாடல். நெஞ்சத்தை நிரப்பிய கானம். வானொலியில் வெற்றி உலா வந்த பாடலிது.
    
         அன்பைத் தேடி என்ற படத்தின்  சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் என்ற பாடல் கேட்டவுடனே நாற்பது  வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி படத்தின் வந்தாலும் வந்தாண்டி ராஜா பாடலும் சிறப்பாக அமைக்கப்பட்டது. இந்தப் படம் வந்த புதிதில் சிவாஜியின் சிகை அலங்காரம் எங்கள் வட்டத்தில் அதகளமாக பகடி செய்யப்பட்டது. என் நண்பன் ஒருவன்  சிவாஜியின் தீவிர ரசிகனாக இருந்தான். அது அவன் தந்தை ஒரு தீவிர காங்கிரஸ் அனுதாபி என்பதால் அவனுக்குள் செலுத்தப்பட்ட ரசனை. நாங்கள் செய்த ரகளையில் தெறித்து ஓடியவன் சில நாட்களில் ரஜினி ரசிகனாக மாறிவிட்டான்.

    77இல் வந்த ஒரு படம் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து பெரும்பாலானவர்கள் அறியாதவண்ணம் உருமாறி அசல் பெறாத வெற்றியை ருசித்தது. அது நாம் பிறந்த மண் என்ற சிவாஜி-கமல் நடிப்பில் வந்து காணாமல் போன படம். இதுவே 1996இல் ஷங்கரின் கைவண்ணத்தில் இந்தியன் என முகமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது. சுட்டதா சுடாததா என்ற விவாதம் தேவையற்றது. மேலும் அது எனது நோக்கமல்ல. நாம் பிறந்த மண் படத்தில் ஒரு பாடல் உண்டு ஆசை போவது விண்ணிலே கால்கள் போவது மண்ணிலே என்ற இந்தப் பாடல் அப்போதைய கமலஹாசனின் மேடைப் பாடகன் இமேஜுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இதன் பிறகே என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு  என்று மறுபடி மேடையில் தோன்றி கமல் பாடினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த இன்னும் இரண்டு சிவாஜியின் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் பாடல்களும் பிரபலமடைந்தன. அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ என்றாலே  பாசமலர் பாதிப்பில் சிவாஜியை வைத்துக்கொண்டு நமது இயக்குனர்கள் கொத்து பரோட்டா போட்ட பல படங்களில் ஒன்றான அண்ணன் ஒரு கோவில் நமது ஞாபகத்துக்கு வந்துவிடும்.  படத்தின் நிறைவே இதன் பாடல்கள்தான் என்பது என் எண்ணம். இந்தப் படத்தை நான் அப்போது பார்க்கவிரும்பவில்லை. மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை என்ற பாடல் மனதை வருடிச் செல்லும் மயிலிறகு போன்ற மென்மையானது. மிகவும் சுவையாகப்  படைக்கப்பட்ட இசை உணவு. நாலுபக்கம் வேடருண்டு  என்றொரு பாடல் இதிலுள்ளது. இரண்டாவது அந்தமான் காதலி என்ற படம். இளையராஜா என்ற புதியவர்  தனது வேறுபட்ட  இசை பாணியால் வெற்றியை சுவைத்துக் கொண்டிருந்த சமயத்திலும் எம் எஸ் வியின் இசை வீச்சு எத்தனை நளினமாகவும் அலங்காரமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியின் இனிமையை விட்டுவிலகாமல் ஒலித்தது! அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடல் ஒரு உவகை. நமக்குப் பிடித்தவர்களின் முகத்தை ஆழ்ந்து நோக்கும் அனுபவம். வாணிஜெயராமின் குரல் அந்த அற்புதத்திற்கு வடிவம் கொடுக்க, ஜேசுதாஸ் இன்னொரு பக்கம் இதன் அழகை அடர்த்தியாக்க எம் எஸ் வி யின் ராக தாளங்கள் மற்றும் ஹான்டிங் டியூன் என்று எல்லாமே இதை ஒரு சாகாவரம் பெற்ற நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. அடுத்த அபாரம்  நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா  . இந்தப் பாடல் அப்போது வெகுவாக பிரசித்தமானதன் ஒரு சிறிய காரணம் ஜேசுதாஸ் திருக்கோவிலே ஓடிவா என்பதை தெருக்கோவிலே ஓடிவா என்று பாடியதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் அந்த தெருக்கோவிலே  என்ற அம்சத்திற்காகவே இந்தப் பாடலை கேட்டதுண்டு. இந்தப் பாடல்  ஜேசுதாசை  எங்கள் வீட்டில் ஒரு விவாதப் பொருளாக்கிவிட்டது.  பணம் என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம் என்றொரு பாடல் டி எம் எஸ் சின் சீறும் குரலில் சிவாஜிக்குப் பொருத்தமான பாடலாக அமைந்தது.

   இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ? என்ற இந்த ராகத் தீற்றல்  அப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வந்த பைலட் பிரேம்நாத் படத்தில் உள்ளது. மென்மையாக  மனதை வருடும் கீதம். Who is the black sheep  அது யார் யார் யார் என்றொரு பாடல் இதில்தான் இருக்கிறது என்று நினைவு.(அல்லது ஜெனெரல் சக்கரவர்த்தியாக இருக்கலாம்.)

    இமயம் கண்டேன் என்ற இமயம் படத்தின் பாடல் மிகவும் நளினமான காதல் கானம். ஆனால் அதைவிட அதிக உள்ளங்களை கொள்ளைகொண்டது கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம் மங்களம் என்ற பாடலே. துடிப்பான இசை துவங்க பின் ஜேசுதாஸ் கங்கை என்று முதல்புள்ளி வைக்க வாணிஜெயராம் யமுனை என்று பின்பாட்டு பாட அதுவரை துடித்து ஓடக் காத்திருந்த  தபேலா தடாலென்று ஒரு மோகன வசீரகத்துடன் தன் தாளக்கட்டை ஆரம்பிப்பது கேட்பதற்கு ஆனந்தம்.

    80இல் சிவாஜி நடிப்பில் மோகனப் புன்னகை என்றொரு ஓடாத படம் வெளிவந்தது. இதில் ஒரு அபாரமான பாடல் உண்டு. தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி என்ற இந்தப் பாடல் எம் எஸ் வி யின் இசை இன்னும் இனிமை சிதையாமல் இருக்கிறது என்பதைச் சொன்னது. உண்மையே. இது ஒரு இசை தெளிக்கும் ஆனந்த அருவிதான். கேட்டிருக்காவிட்டால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். திகட்டாத தேன்சுவை கொண்ட பாடல். தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை என்ற பாடலும் சிறப்பானது

       இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் விஸ்வரூபம் என்ற படம் வந்து சடுதியில் காணமல் போனது. இதில் ஒரு மிக அபூர்வமான பாடல் ஒன்று உண்டு. ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி என்ற இந்த அற்புதப் பாடல் சற்று கவனம் ஈர்த்தது அப்போது. இருந்தும் இளையராஜாவின் அதிரடி டப்பாங்குத்து வீச்சுக்கு முன் களையிழந்து போனது.  நான் பட்ட கடன் எத்தனயோ பூமியில் பிறந்து என்று வழக்கமான சிவாஜிக்கான பாடலும் இதில் உள்ளது. இது அருமையான மேற்கத்தியப்  பூச்சு கொண்ட பாடல்.

     எம் எஸ் வி  மேற்கத்திய பாணியில்  படைத்த  என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது என்ற பாடல் ரத்த பாசம் என்ற படத்தில் இடம்பெற்றது. ஒரு சுவையான நேர்த்தியான மேற்கத்திய இசைச் சாயல் படிந்த பாடல். சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்டபோது அந்த இசை மிக நவீனமாக இருப்பதை உணர்ந்து சற்று வியப்படைந்தேன்.  பாடலின் பல்லவியின் பின்னே துடிப்பாக ஒலிக்கும் ட்ரம்ஸ் ஒரு ஆச்சர்யக் குறியை எனக்குள் விதைத்தது.

   அடுத்து நான் குறிப்பிடுவது இப்போது மக்களின் பொது ஞாபகத்தில் இல்லாத ஒரு அபூர்வமான அற்புதப்  பாடலையே. இப்பாடல் வந்தபோது சிவாஜி பாடல் என்று எனது நண்பர்கள் பகடி செய்தததில் கவனமின்றி கேட்டு உடனே மறந்தும்விட்ட ஆனால் இப்போது என் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கிவிட்ட ஒரு மேகத் தீண்டல். அது 81ஆம் ஆண்டு வெளியான அமர காவியம்  என்ற காணாமல் போன ஒரு படத்தின்  செல்வமே,ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் என்ற பாடல்தான். 2014 ஆம்  ஆண்டிலும் எத்தனை நவீனமாக ஒலிக்கிறது இப்பாடல் என்ற மின்சார உணர்வு மின்னல் போல தாக்குகிறது. எண்பதுகளில் எம் எஸ் வி தன் பொலிவை இழந்து விட்டார் என்று சொல்லும் மட மனங்களே இதை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் சிலாகிக்கும் இசையை விட இது எத்தனை மகத்துவமானது என்பதை உணர்வீர்கள்.

       கீழ்வானம் சிவக்கும் என்ற படம் இதே ஆண்டில் வந்து நன்றாகவே பேசப்பட்டது. வழக்கம்போல சிவாஜிக்கான எல்லா அம்சங்களும் கொண்ட நாடகத்தனமான படம். போட்டிக்கு சரிதா வேறு. பிறகு கேட்கவா வேண்டும்? படம் பூராவும் ஒரே உணர்ச்சிக் குவியல்தான். இதில் இன்றைக்கும் நான் நினைவில் வைத்திருப்பது புதுமணத் தம்பதியினரை வாழ்த்திப்பாடுவதாக வரும் கடவுள் படைத்தான் மணநாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலைமகளே நீ வாழ்கவே என்ற மிக நல்ல பாடலைத்தான். டேப் ரெகார்டர் வாங்கிய புதிதில் என் குரலைக்  கேட்க  விரும்பி ஒரு முறை ரொம்பவும் ரகசியமாக கீழ் தொனியில் இந்தப் பாடலைத்தான்  பாடி (!) பதிவு செய்தேன். "ரெகார்டிங்" முடிந்து போட்டுப்பார்த்தால் எதோ பிராண வாயுவுக்கு போராடும் ஐ சி யு நோயாளி போல என் குரல் ஒரே மூச்சுக்  காற்றாக  ஒலிக்க, இந்தக் கடுந்துயரை போக்கும் வழி தெரியாது நான் விழிக்க, என் அண்ணன் இதை எப்படியோ கேட்டுவிட்டு "அட பாட்டெல்லாம் பாடுவியா?" என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க....அதன் பின் அந்த சிகப்பு பொத்தனை அழுத்தி எந்தவித பரிசோதனைகளையும்  செய்யத் துணியவில்லை நான் . Once bitten twice shy.

     புது வருடம் பிறந்தாலே  வேறு நாதியில்லாமல் ஒரே ஒரு பாடலைத்தான் நாம் கேட்டாகவேண்டும்.  அது சகலகலாவல்லவன் என்ற கேடுகெட்ட கீழ்த்தரமான படத்தின் ஒரே சகித்துக்கொள்ளக்கூடிய அம்சமான இளமை இதோ இதோ  இனிமை இதோ இதோ பாடல்தான். பாடலின் துவக்கத்தில் ஹேப்பி நியு இயர் என்று வரும்  ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு இதை புது வருடப் பாடல் என்ற  சான்றிதழை நமது விருப்பமின்றி சில  தொலைக்காட்சிகளே தீர்மானித்துவிட்டது ஒரு துரதிஷ்டம்.  இந்த அபத்தமான பாடலைவிட பாலைவனைச்சோலை படத்தின் பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி என்ற பாடல் இந்தச்  சூழலுக்கு பொருத்தமானது என்பது என் எண்ணம். இதையும் விட இன்னொரு புது வருடப் பாடல் நம்மிடம் இருக்கிறது. அது 82ஆன் ஆண்டு வெளியான (காளிச்சரன் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான) சங்கிலி என்ற படத்தின்   நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க ஹேப்பி நியுயியர் என்ற எம் எஸ் வி யின் இசையில் வந்த பாடலே. ஒரே ஒரு முறை இதைக் கேட்டால் நான் சொல்வதின் நியாயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். ஆர்ப்பாட்டமான மேற்கத்திய இசை. அருமையான நம்பிக்கை துள்ளும் வரிகள். மிகச்  சிறப்பான மெட்டின் மீது வரையப்பட்ட ஒரு இசை ஓவியம். இது  பலரால் அப்போது விரும்பப்பட்டது. சிலோன் வானொலியில் பல வாரங்கள் முதலிடத்தில் இருந்தது. சொல்லப்போனால் இளமை இதோ பாடலின் கொச்சையான குத்துவேன் வெட்டுவேன் வீரன் சூரன் போன்ற வரிகளைவிட சிறப்பான கவிதை  கொண்ட நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற இந்தப் பாடலே  ஒரு புதிய ஆண்டின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் களிப்பையும் கொடுப்பது. இதுவே  ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் எல்லா தகுதிகளையும்  கொண்டது. மேலும்  புத்தாண்டை வரவேற்ப்பதற்க்கான ஒரு சிறந்த பொருத்தமான பாடலாகவும்  எனக்குத் தோன்றுகிறது.


      சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் பல சாகா வரம்பெற்ற காவிய கானங்களைக் கொடுத்து தன் சுயத்தை இழந்தவராகவே எம் எஸ் வி எனக்குத் தோற்றமளிக்கிறார். அவர்கள் அடைந்த புகழ் ஒரு வரலாறு. அதற்கு எம் எஸ் வி யும் ஒரு காரணம் என்பதை பல நேரங்களில் நாம் உணர்வதேயில்லை. அவருக்கு வேண்டிய புகழ் வெளிச்சம் வெறும் மேடை அலங்காரமாகவே இருக்கிறது. இத்தனை அற்புதங்களை அள்ளிவீசிய அவரின் இசையறிவை  பாராட்டுவதற்கு கூட சில வார்த்தைப் போர்  புரியவேண்டியதிருக்கிறது என்பதே நமது இசை வரலாறு செல்ல வேண்டிய திசையில் பயணிக்கவில்லை  என்ற சீரழிவின் அறிகுறி.

       ஒரு முறை முத்துக் குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா என்ற தூத்துக்குடி வட்டார தொனியை வைத்து எம் எஸ் வி அட்டகாசம் செய்த அனுபவி ராஜா அனுபவி பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு பெங்காலி நண்பன் "இது ஹிந்திப் பாடலின் நகல்." என்றான் என்னிடம். நான் "இல்லை. இது முதலில் தமிழில் வந்த பாடல்." என்றேன். எதிர்பார்த்தைபோலவே அவன் அதை நம்பவில்லை. ஒருவேளை ஒரு தமிழ்ப் பாடல் ஹிந்தியில் நகல் செய்யப்படுவதை அவன்  தங்கள்  ஆளுமை கசங்கும் நிகழ்வாகப் பார்த்திருக்கலாம். இதில் தவறேதுமில்லை.  நம் மண்ணைச் சார்ந்திராத ஒரு சமூகத்திலிருந்து வந்தவன் அவன். ஆனால் அரை நூற்றாண்டாக  நம் சமூக பாரம்பரியத்தில் நிலை கொண்டுவிட்ட என்றுமே துறந்து விட முடியாத இசை மாளிகைகளை எழுப்பியவர்களை நம்மில் சிலர் எத்தனை எளிதில் இகழ்ச்சியுடன்  மிகச் சாதாரணமான பாராட்டுக்கான வார்த்தைகளைக் கூட உதிர்க்காமல்   கடந்து செல்கிறார்கள்! இன்று ஐம்பதாயிரம் விலை கொண்ட ஸ்மார்ட் போன் நம்மிடமிருந்தாலும் நமது தந்தைகள் வைத்திருந்தது விரல் வைத்து சுற்றும் அந்த கறுப்பு நிற டெலிபோன்தான். என் தந்தை போன்ற பலரிடம்  அதுவும் கிடையாது. நேற்றைய நிகழ்வை மறந்துவிடத் துடிக்கும் இந்த அற்பத்தனமான மனோபாவம் இன்று நிகழ்வதையும்  அதே  தராசில்தான் வைக்கப்போகிறது. எம் எஸ் வி போன்ற மகத்தான இசை கோபுரங்களே தூசிபடிந்து சிதிலமடைந்து சரிந்து போகக்கூடிய  சாத்தியங்களிருந்தால் இளையராஜாவும் ரஹ்மானும் இன்ன பிற திடீர் இசை மழைகளும்  பாவம்தான்!



அடுத்து: இசை விரும்பிகள் XXII -எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி.