Wednesday 15 July 2015

காலத்தை வென்ற இசை

இது ஒரு மீள் பதிவு.

   





     இசை விரும்பிகள் -  காலத்தை வென்ற இசை 



        24 காரட் சுத்தத்  தங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதை தூரத்திலோ அருகிலோ  வைத்துக்கொண்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். ஆனால் அது கழுத்திலோ,காதிலோ, மூக்கிலோ பளபளப்பாக வந்து அமர  சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. தங்கத்தோடு கொஞ்சம் செம்பு வெள்ளி என்று கலந்தால்தான் அதன் நோக்கம் பூர்த்தி அடைகிறது. இப்படி உருமாறிய 22 காரட் தங்கமே நமது மெல்லிசை. இந்த மெல்லிசை இங்கே வந்த  பிறகுதான் ராகங்கள் மாறின. தமிழிசையின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. பலர் இதைப்  பற்றிய புரிதல் எதுவுமின்றி தனக்குப் பிடித்த இசைஞரின் பாடல்களை முன்னிறுத்தி தமிழ்த் திரையிசை இவரிடமிருந்துதான் புறப்பட்டது என்று முரட்டுத்தனமாக நம்புவதோடல்லாமல் மற்றவர்களையும் அப்படி நம்பத் தூண்டுவதால்தான் இங்கே  மெல்லிசையைப் பற்றி அதிகம் பேச வேண்டியதாக இருக்கிறது.

     தமிழ்த் திரையில்  மெல்லிசையை கொண்டுவந்தவர்கள் பொதுவாக எல்லோரும்  நினைப்பதைப் போல விஸ்வநாதன்-ராமமூர்த்தி அல்ல. பல இசைஞர்கள் ஆண்டுகாலமாக புதிய மெட்டுக்களையும் புதிய இசை அமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே நிறுவினார்கள் என்பதே உண்மை.இழை இழையாக நெய்யப்பட்ட ஒரு தரமான துணியைப் போல மேற்கத்திய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் நம் நாட்டுப்புற இசை போன்ற புதிய இழைகளைக் கொண்டு ஒரு நவீன இசைவடிவமாக இந்தப் புதிய இசை அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதில் பலரின் பங்களிப்பு இருந்தாலும்  மெல்லிசையை தமிழ்த் திரையின் மிகப் பிரபலமான இசையாக உருமாற்றியதன் பெருமை தமிழ்த்  திரையின் உன்னதமான இரட்டை இசைஞர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கே உரியது.

  

    ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து அதிகம் பேசப்படுபவர் அல்லது ஒரு சாதாரணனுக்கு உடனடியாக  நினைவுக்கு வருபவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அதற்கு காரணம் இருக்கிறது.  அவரும் அவரது நண்பர் சாம்வெல் கோல்ரிட்ஜ்ஜும் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் ரொமாண்டிக் மூவ்மெண்ட் என்று சொல்லப்படும் ஆங்கில கவிதை உலகை வேறு வட்டத்தில் சுழற்றிய  ஒரு இயக்கத்தை தோற்றுவித்தார்கள். அதற்கு முன் ஆங்கிலக்  கவிதைகள்  கடவுளையும்,  மகான்களையும் சரித்திர நாயகர்களையும், ஐரோப்பிய புராண மாந்தர்களையும் தன் கருப்பொருளாகக் கொண்டு  படித்த மேல்தட்டு "நாகரிக" அடையாளம் கொண்டிருந்த அரச, மற்றும் பிரபு குலத்துக்கே எழுதப்பட்டு வந்தன.கவிதை ஒரு அறிவாளியின் தேர்வு என்றும் அதை புரிந்து கொள்ள ஒரு பாமரன் தன் அறிவை  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறியீடாக உணர்த்தப்பட்டு அவனைத் தொடாமல் செல்லும் ஒரு மாயக் காற்று போலவே  அது  செயல்பட்டது.
    
     இந்நிலையில்தான் வோர்ட்ஸ்வொர்த் ஒரு வெற்றுக் காகிதத்தில் தான் உணர்ந்த சில ரம்மியமான உணர்வுகளை கவிதையாகப்  புனைய  தன் பேனாவில் இயற்கையை நிரப்பிக் கொண்டு உட்காருகிறார். அவர் கவிதையின் கரு ஒரு சிறிய மலரை, சுழன்று வீசும் காற்றை, பனி படர்ந்த மலைகளை, ஒய்யாரமாகப் பாடும்  பறவைகளைச்   சுற்றியே இருந்தது. இந்த எளிமையான கவிதைப்போக்கு அவருக்கு முன் யாருக்கும் பொறி தட்டவில்லை. எளிமையும் ரம்மியமும் எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளும் கொண்ட அவரது  கவிதைகள்  அவரை ஆங்கில இலக்கியத்தில் அதுவரை இல்லாத ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. அவரைப் பின்பற்றியே அதன் பின் வந்த மற்ற கவிஞர்கள் இயற்கையை முன் நிறுத்தி தங்கள் கவிதைகளைப் புனைந்தனர்.வோர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிஜ் இருவரின் இந்த சம்பிராதய உடைப்பு எனக்கு விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இரட்டையர்களை ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் வேறு வேறு காலங்களில், வேறு வேறு மக்களிடையே, வேறு வேறு படைப்புக்களில்  செயல்பட்டாலும் அவர்களின் கலைகள் வேறுபட்டாலும்  அவர்கள் செய்தது ஒன்றேதான்.  ஒரு கசப்பான மாத்திரையை உடைத்து தேனில் கரைத்துக் கொடுக்கும் யுக்தியையே அவர்கள் செய்தார்கள்.

     முன்பு வானொலியில் முக்கியமான நிகழ்சிகளுக்கு இடைப்பட்ட ஒரு குறுகிய நேரத்தை " இப்போது மெல்லிசை கேட்கலாம்" என்று சொல்லி நிரப்புவார்கள்.இது பொதுவாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நீடிக்கும்.இரண்டு மூன்று இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அவ்விதமான இசை  என் மனதில் மெல்லிசை என்பது சினிமா இசைக்கு முரணானது என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த எண்ணமே  மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களில் ஈடுபாடு காட்டமுடியாமல் செய்து அவற்றை புறக்கணிக்கவும் தூண்டியது.சினிமா இசை, மெல்லிசை என்று எனக்கு நானே இரண்டு கோடுகளைப் போட்டுக் கொண்டு முன்னதையே விரும்பினேன். ஒரு தவறான புரிதல் எப்படி வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்ற வருத்தம் பின்னர் எனக்கு ஏற்பட்டது.

     ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையிசையை வெற்றிகரமாக முன் நடத்திச் சென்ற  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்  (வி-ரா)இசைத் துவக்கம் ஒரு விபத்து போலவே நிகழ்ந்தது. சி ஆர் சுப்புராமன் 52இல் மரணித்த போது அவருடைய உதவியாளர்களாக இருந்த  இவர்கள்  இருவரும் தடைபட்ட அவரது  இசைப் பணிகளை  தொடர்ந்து செய்து  முழுமையாக்கினார்கள். இந்தப் புதிய உறவு இருவரிடமும் நீடிக்க என் எஸ் கிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். அவரே இந்த இரட்டையர்களை சேர்ந்து பணியாற்றும்படி வற்புறுத்தி தன் படத்திலேயே அவர்களை முதன் முதலாக இசைஞர்களாக அறிமுகப்படுத்தினார். 52 இல் பணம் என்ற படத்தில் இவர்கள்  தங்களது திரையிசையை  துவங்கினார்கள் .(எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்? என்ற என் எஸ் கிருஷ்ணனின்  பாட்டு இதில்தான் உள்ளது.)

        50 களில் ஜி ராமனாதனின் ஆளுமை உச்சத்தில்  இருந்தது. இதே சமயத்தில்தான் திரையிசைத் திலகம் என்று அழைக்கப்படும்   கே வீ மகாதேவனும் இங்கே இசைப் பிரவாகம்  செய்து கொண்டிருந்தார். இவற்றுக்கிடையில் ஹிந்துஸ்தானி இசையின் பாதிப்பும் தமிழ்த் திரையிசையை    கட்டிப்போட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் வி-ரா  தங்கள் இசையை நிரூபிக்க முயன்றார்கள். சொல்லப்போனால் ஹிந்தி இசையின் பாதிப்பை மீறி அப்போது பாடல்கள் அமைப்பது ஒரு சவாலான காரியம். ஏனென்றால் படத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே பிரபலமாக இருந்த ஹிந்தி இசையையே தமிழில் கொண்டுவர பெரிதும் விரும்பினார்கள். அந்தக் காலத்தின் புகழ் பெற்ற பல ஹிந்திப் பாடல்களை தமிழில் உருமாற்றி ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைப்  பிணைத்து  பாடல்கள் அமைப்பது அப்போது ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வந்தது. இந்தக் கட்டுகள் தளர  பல புதிய முயற்சிகள் தேவைப்பட்டன.

   கர்நாடக சங்கீதத்தில்  புலமை பெற்ற டி கே ராமமூர்த்தி அடிப்படையில் ஒரு வயலின் வித்வானாக இருந்தாலும், அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.  விளைவு கர்நாடக ராகங்களும் மேற்கத்திய செவ்வியல் இசையும் பாலும் தேனும் போல கலந்தன. தமிழில் முன்னரே மேற்கத்திய செவ்வியல் இசையின் பாதிப்பும் நவீன மேற்கத்திய இசையின் தொடுதலும் இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவற்றை தங்கள்  பாடலில் சரியான அளவில்  கலந்து  அதேசமயம் நம் nativity அதனால் சற்றும் திரிந்து விடாமல் இந்தப் புதிய  கலப்பிசையை  (fusion)அவர்களின் முத்திரை இசையாக மாற்றிக்காட்டினார்கள். கர்நாடக ராகங்கள் என்னும் சுவற்றின் மீது தங்கள்  மெல்லிசையை மேற்கத்திய இசையின் தீற்றலோடும்  எளிமையும் புதுமையுமான மெட்டுக்களோடும் இழைத்துத்   தங்கள் இசை வண்ணத்தைத்  தீட்டினார்கள். இந்த இசையோவியங்கள்  அறுபதுகள் முழுவதும் அனாசயமாக ஆட்சி செய்தன. இப்படிப்பட்ட இசைப் பரிசோதனைகள் அப்போதே செய்யப்பட்டதாலேயேதான்  அதன் பின் வந்த பல இளம் இசைஞர்களுக்கு பின்னர்  விசாலமான  பாதை கிடைத்தது. அவர்களால்  பெரிய சிரமங்களின்றி பாடல்களும்  அமைக்க முடிந்தது.  இந்த உண்மை தெரியாத பலர் இணையத்தில் உளறிக்கொட்டுவதை படிக்க நேரிடும் போது அசதியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது..உண்மை   இதுதான் என்று அவர்களுக்கு எழுதினாலும் அவர்கள் அதை வசதியாக தவிர்த்துவிடுகிறார்கள்.

       இதன் தொடர்ச்சியாக  இணையத்தில் உலாவரும் சில தவறான புரிதல்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவற்றில் ஒன்று  தமிழில் முன்னிசை(prelude), இடையிசை(interlude) இரண்டும் இளையராஜாவுக்குப்  பிறகே ஏற்பட்டது என்பது.இது ஒரு மகா அபத்தமான சிந்தனை என்பதைத் தாண்டி   எப்படி ஒரு தீவிர இசை ரசனை சில உண்மைகளை மறுக்கிறது என்ற கருத்தை  படிப்பவர்களுக்கு உணர்த்தவே  இதை எழுதுகிறேன். இது போன்ற இன்னும் பல போதையேறிய  கருத்துக்கள் உண்மையான இசைத் தேடலை என்னுள் வலிமையாக்கின.அதன்  விளைவாகவே இந்த இசை விரும்பிகள் என்னும் நீண்ட பதிவை ஆரம்பித்தேன்.

          52 இல் துவங்கி 50 களின் இறுதியில் அதி  வேகம் பிடித்து,  புதிய சாலைகளில் 65 ஆம் ஆண்டு வரை பயணித்த  இந்த இரட்டையர்களின் இசைப் பாய்ச்சல் படத்திற்கு படம் மெருகேறி புதிய   எல்லைகளை தமிழ்த்திரையிசைக்கு அறிமுகம் செய்தது.  மெல்லிசையை ஒரு இனிய இசை அனுபவமாக இவர்களின் பாடல்கள் மாற்றின. இசையின் ரசனையை இந்த இரட்டையர்கள் அடுத்தடுத்த  கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். 

    குறிப்பாக அறுபதுகளில் வந்த அவர்களின் ஒவ்வொரு பாடலும் வீரத்தை வீரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கை தரும் தாளங்களாக,  தாய் மொழியைப் போற்றும் தமிழின் தங்கக்குரலாக, பண்பாட்டை வீண் பெருமைகளின்றி பாடும் பண்பட்ட பாட்டாக,குழந்தைகளுக்கு இசையோடும்  தாலாட்டாக, உறவைப் போற்றும் மக்களின் உன்னத  உணர்ச்சியாக ,காதலை அதன் எல்லைகள் தாண்டாது நளினமாகச் சொல்லும் காதலர்களின் கீதமாக, வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனிதர்களின்  தத்துவ கானமாக, வீழ்ந்த  நெஞ்சங்களின் வேதனையை வெளிப்படுத்தும் துயர இசையாக,  தம்பதிகளின் ஆத்மார்த்தமான அன்பை விரசங்களிலாமல்  பண்பாகப் பாடும் பாடல்களாக, எதிர்பாலினரை விகாரங்களின்றி பகடி செய்யும் துள்ளல் இசையாக,இளைஞர்களின் குதூகலத்தை குறைவின்றி கொடுக்கும் கும்மாளப் பாடல்களாக,  பிரிவைச் சொல்லும் மனைதை பிழியும் சோக ராகங்களாக, காதல் தோல்வியை போதையின்றி நாகரீகமாக உணர்த்தும் நல்லிசையாக, காதல் கைக்கூடிய காதலர்களின் உணர்ச்சியை காமமில்லாமல் காட்சிப்படுத்தும்  களிப்பான கானமாக ஒலித்தன.

     மேற்குறிப்பிட்ட பத்தியோடு கீழே உள்ள பாடல்களை பொருத்திப்பாருங்கள்.இது உங்களுக்கே புரியும்.
    
    அச்சம் என்பது மடமையடா- மன்னாதி மன்னன்,60
தமிழுக்கும் அமுதென்று பேர்- பஞ்சவர்ணக்கிளி,65(இது எம் எஸ் வி தனியாக இசை அமைத்தது)
    கண் போன போக்கிலே கால் போகலாமா?- பணம் படைத்தவன்,65
   அத்தையடி மெத்தையடி- கற்பகம்,63
   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாசமலர்,61
   அனுபவம் புதுமை  அவனிடம் கண்டேன் - காதலிக்க நேரமில்லை,64
   சட்டி சுட்டதடா கை விட்டதடா - ஆலயமணி,62
   மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி,62
   வளர்ந்த கலை மறந்துவிட்டாள்-காத்திருந்த கண்கள், 62
 ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும்  புதிய பறவை,64,
  ஏய் நாடோடி- அன்பே வா,66     (இசை-எம் எஸ் வி)
   ஆண்டவன் படச்சான் என்கிட்டே கொடுத்தான் - நிச்சய தாம்பூலம்,61
   நினைக்கத் தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி, 63
   எங்கிருந்தாலும்  வாழ்க- நெஞ்சில் ஓர் ஆலயம், 62
   கொடியசைந்ததும் காற்று வந்ததா- பாரத்தால் பசி தீரும்,62

   இதே போல ஒரு பட்டியலை இவர்களுக்கு பின் வந்த இசைஞர்களின் பெயருக்கு கீழேயும் தயாரிக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை கண்ணியமான, தரமான பாடல்கள் என்பது கேள்விக்குரியது. மேலும் அது போன்ற ஒரு ஒப்புமை இவர்களுக்கு நாம் செய்யும் அநீதி என்று நான் கருதுகிறேன்.

      அறுபதுகளில் எப்படி நமது மக்கள் இசையை ரசித்தார்கள் என்பது ஆய்வுக்குரியது. அப்போது ரெகார்ட் பிளேயர் என்று சொல்லப்படும் இசைத் தட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் வெகு சிலரே அதை தங்கள் வீடுகளில் வைத்திருந்தார்கள். வானொலியே பெரிதும் எல்லோரிடமும் இருந்தது. இந்த வானொலியே இசையை எல்லோரிடத்தும் கொண்டு சேர்த்தது. வானொலியில் சினிமாப் பாடல்கள் தற்போதைய எப் எம்  போலில்லாமல் குறிப்பிட்ட கால அளவிலேயே ஒலிபரப்பு செய்யப்பட்டன. கதைப் புத்தகம், வானொலி இசை இது  இரண்டும்தான்  அப்போது பெரும்பான்மையான மக்களிடம் இருந்த பொழுதுபோக்குகள்.பாடல்களை பாக்கெட்டுக்குள் வசதியாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் எவரின் கற்பனையிலும் கூட உதிக்காத அந்தச் சூழலில் ஒரு ரசிகனின் ஆவலை சற்று எண்ணிப்பாருங்கள். பலநாட்கள் காத்திருந்து பின் திடீரென வானொலியில் தனக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போது அந்த ரசிகன் அடைந்த ஆனந்தம் அளவில்லாதது. திரையிசைப் பாடல்கள் வெறும் மூன்று நான்கு நிமிட கால நகர்ப்பாக (time pass) இல்லாமல் அவை வாழ்க்கையின் ஒரு கூறாகவே   இருந்தன. அவ்விசை அவர்களின் மூச்சில் சுவாசமாக கைகளில் உணவாக  இருந்து அவர்களை வழிநடத்தியது.அவர்கள் அந்தப் பாடல்களில் தங்கள் வாழ்கையின் ருசியையும், வலியையும் ஒரு சேர அனுபவித்தார்கள்.வெறும் விடலைப் பையன்கள் மட்டும் கேட்கும் இசையாக இல்லாமல் ஒரு பொது ரசனைக்கான அழகியலாக எல்லோரும் காதலிக்கும் கலையாக  அவை  ஆட்சி செலுத்தின.  எனவேதான் அப்பாடல்கள் கண்ணியமாகவும்,தரமாகவும், பண்பாகவும் இருந்தன.

    மேலும்  காமத்துக்கான சூழல் இருந்தாலும் விரக தாப முனங்கல்கள் இல்லாமல் மிகவும் கவித்துவமாக பாடல்களை அவர்கள் அமைத்தார்கள். உதாரணத்திற்க்கு " அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்"(பாவமன்னிப்பு ,61) என்ற பாடலை ஆராய்வோம். ஒரு முறை என் நண்பன் ஒருவன் அந்த காலத்துப் பாடல்களிலேயே விரசம் இருப்பதாக் கூறி இந்தப் பாடலை குறிப்பிட்டான்.அப்போதைக்கு நானும் அதை வழி மொழிந்தேன். ஆனால் உண்மையில் இது காமத்தை விரசமின்றி உணர்த்தும் ஒரு எழில் கொண்ட பாடல். சுசீலாவின் குரலில் ததும்பும் மிச்சமிருக்கும் இச்சை இங்கே கேட்பவரை எவ்விதத்திலும் முகம்  சுளிக்க வைப்பதில்லை. "அவர் என்னைத்தான்".. என்று குரலை நீட்டிப்பதிலும் பின் வரும் ஒரு நொடி நிசப்ததிலும் அதன் பின் தொடரும் "எப்படிச் சொல்வேனடி" என்ற வெட்க மறுத்தலிலும்  தெரிவது ஒரு பெண்ணின்  இனிமையான உணர்ச்சியே அன்றி காமம் இல்லை. இந்தத் தரம் இவர்களின் அடுத்த தலைமுறை இசையில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிப் போனதையும் இங்கே நான் நினைவூட்ட விரும்புகிறேன்.காமத்தை வைத்து இதயத்தை வருடும் இசையாக இல்லாமல் இச்சையை தூண்டும் இசையாகவே பின் வந்தவர்களின் பாடல்கள் அமைந்தன.இளையராஜாவின் பிரபலமான "நிலா காயுது"(சகலகலாவல்லவன்,82) இதற்கு மிகச் சரியான உதாரணம்.

       எந்த நதியும் ஒரு இடத்தில் மிக அகலமாக விரிவடைந்து செல்வதைப் போல, எந்த மழையும் ஒரு இடத்தில் அதிகமாகப் பொழிவதைப்போல, எந்த மலையும் ஓரிடத்தில் உயரமாக இருப்பது போல,எந்த விளக்கும் ஒரு சமயத்தில் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல, எந்தக் கலைஞனுக்கும் ஒரு உயர்ந்த காவியம்   அமைவதைப்போல தமிழ்த் திரையிசையும்  அதன் உச்சத்தைத் எட்டியது.அந்த உச்சம்  நிகழ்ந்தது இந்த அறுபதுகளில்தான்.இசை விமர்சகர்கள் முதல் ஒரு சாதாரன   ரசிகன் வரை இன்றைக்கும் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று  வர்ணிப்பதும் சுட்டிக்காட்டுவதும்  கே வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன்,டி எம் எஸ், சுசீலா,எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் போன்ற கூட்டணி திரையில் ஆட்சி செய்த இந்த அறுபதுகளைத்தான். It's a very profound statement of truth. இதை மறுப்பதற்கு மனசாட்சியை சற்று மறந்துவிட வேண்டும்.

        வி-ரா தமிழில் கூட்டிசையை(chorus) வெற்றிகரமாக பயன்படுத்தியவர்கள் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் மேற்கத்திய பாணி இசைதான். பொதுவாக இவர்கள் பாடலின் இடையே வரும் இடையிசையில் (interlude) இவ்விதமான கூட்டிசையை அறிமுகப்படுத்தினர். இதற்கு உதாரணமாகப் பல பாடல்களை சுட்டிக்காட்ட முடிந்தாலும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது  பணம் படைத்தவன்(65) என்ற படத்தில் வரும் "கண் போன போக்கிலே" என்ற பாடல். மேற்கத்திய இசையின் நிழல் அந்தப் பாடல் முழுவதும் படிந்திருந்தாலும், மெல்லிசையை விட்டு அது கொஞ்சமும் மீறிச் செல்லாமல், இரண்டும்  ஒன்றோடொன்று சுகமாக கை கோர்த்துச்  செல்வதை உணரலாம்.இரண்டாவது புதிய பறவை படத்தில் வரும்  "பார்த்த ஞாபகம் இல்லையோ?" பாடல்.இந்தப் பாடலின் மிகப் பெரிய பலமே ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் கூட்டிசைதான்.

 










இதைத்  தாண்டி இடையிசையை பிரபலமாகிய பெருமையும் இவர்களுக்குண்டு.  இடையிசை  இவர்களின் பாடல்களில் அன்னியமாக ஒலிக்காமல் பாடலின் வேகத்தையும்  நளினத்தையும் குலைத்து விடாமல் பாடலின் போக்குடனே சென்று சரணத்தோடு இணையும்.இந்த இடையிசை இளையராஜாவின் காலத்தில் உச்சத்திற்கு சென்று தற்போது காணாமலே போய்விட்டது.

           இதைத் தவிர இவர்களின் பாடல்களில் வரும் ஹம்மிங் சிறப்பு பெற்றது.நெஞ்சம்  மறப்பதில்லை பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த பிரபலமான  ஹம்மிங் கேட்பவரை ஒரு இசை அனுபவத்திற்கு தயார் செய்துவிடுகிறது. இந்த கோரஸ் மற்றும் ஹம்மிங் ஒரு மேற்கத்திய இசை அமைப்பாக இருந்தாலும் அவற்றை இவர்கள் மெல்லிசையோடு துல்லியமாகக் கலந்து நம் இசைக்கு  இன்னொரு  பரிமாணம் சேர்த்தார்கள்.

    மேலும் விஸ்வநாதன் பாடல்களுக்குள்ளே இனிமையாக மெட்டுக்களை  மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருந்தார். புதிய பறவை(64) யின் மிகச் சிறப்பான பாடலான "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" என்ற பாடலில் சுசீலாவின் குரல் தொட்டுச் செல்லும் பல  ஏற்றங்களும் இறக்கங்களும் கேட்பவரின் மனதில் அந்தப் பாடலை உறையச் செய்துவிடுகிறது. பாடியவர் இதைச்  செய்தாரா அல்லது இசை அமைத்தவர் அப்படிச் செய்யப் பணித்தாரா என்பதை நான் எப்போதும் எனக்குள்ளே கேட்டுக்கொள்வதுண்டு.

       61 ஆம் ஆண்டு இவர்களின் இசைக்கு ஒரு மிக முக்கியமான வருடம். அந்த வருடத்தில் வந்த இவர்களின்  படங்களைப் பாருங்கள்.
பாக்கியலக்ஷ்மி- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நிச்சய தாம்பூலம்- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா,
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைதானே 
பாலும் பழமும்,-ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் , 
காதல் சிறகை,
போனால் போகட்டும் போடா
பாசமலர்,- எங்களுக்கும் காலம் வரும், 
மலர்களைப் போல் தங்கை, 
மலர்ந்தும் மலராத,
யார் யார் யார் அவர் யாரோ, 
வாராயென் தோழி
பாவமன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம், 
வந்த நாள் முதல், 
அத்தான் என்னத்தான்,
பாலிருக்கும் பழமிருக்கும், 
காலங்களில் அவள் வசந்தம்

   மேற்குறிப்பிட்ட  பாடல்களுக்கு அறிமுகமோ அல்லது விளம்பரமோ தேவையில்லை.பாடலின் முதல் வரியே பலருக்கு அந்தப் பாடல்களின் வழியே அவர்கள் உணர்ந்த பல்வகை உணர்சிகளை ஒரே நொடியில் மீட்டுவிடும்.

         62 ஆம் வருடம் இவர்களின் இசை இன்னும் பல இலக்குகளை எட்டியது.
 
ஆலயமணி,-கண்ணான கண்ணனுக்குஅவசரமா ,
பொன்னை விரும்பும் பூமியிலே,
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா,
சட்டி சுட்டதடா,
பலே  பாண்டியா, -அத்திக்காய் காய் காய் , 
வாழ நினைத்தால்வாழலாம் 
பந்த பாசம், - இதழ் மொட்டு,
காத்திருந்த கண்கள்,-வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ,
காற்று வந்தால் தலை சாய்க்கும் நாணல்,,
நெஞ்சில் ஓர் ஆலயம்,-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், 
சொன்னது நீதானா,
முத்தான முத்தல்லவோ
பாதகாணிக்கை,- வீடு வரை உறவு,
உனது மலர் கொடியிலே 
பாசம்,-பால் வண்ணம் பருவம், 
உலகம் பிறந்தது,
என்னருகில் நீ இருந்தால்
படித்தால் மட்டும் போதுமா,-பெண் ஒன்று கண்டேன்
நான் கவிஞனுமில்லை,
பார்த்தால் பசி தீரும்,-யாருக்கு மாப்பிள்ளை யாரோ, 
கொடி அசைந்ததும் காற்று வந்ததா,
போலீஸ்காரன் மகள்,-நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ,
இந்த மன்றத்தில் ஓடி வரும்
சுமைதாங்கி,-மயக்கமா கலக்கமா, 
மனிதன் என்வபன் தெய்வமாகலாம்
வீரத்திருமகன்-ரோஜா மலரே ராஜ குமாரி , 
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் 

        63 ஆம்  வருடம் வந்த படங்களைப் பார்ப்போம்.

ஆனந்த ஜோதி,நினைக்க தெரிந்த மனமே,
ஒரு தாய் மக்கள், 
பனி இல்லாத மார்கழியா
இதயத்தில் நீ,-பூ வரையும் பூங்கொடி ,சித்திரப் பூவிழி,
கற்பகம், -மன்னவனே அழலாமா,
அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு,
மணியோசை,தேவன் கோவில் மணியோசை,
நெஞ்சம் மறப்பதில்லை,-நெஞ்சம் மறப்பதில்லை, 
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை 
பார் மகளே பார், -நீரோடும் வைகையிலே, 
அவள் பறந்து போனாளே, 
மதுரா நகரில்
பணத்தோட்டம்,-பேசுவது கிளியா,
ஒருவர் ஒருவராய்
பெரிய இடத்துப் பெண்-கட்டோடு குழலாட,
அன்று வந்ததும், 
பாரப்பா பழனியப்பா

      64 இல் வந்த படங்கள்.

ஆண்டவன் கட்டளை,-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ,
உள்ளம் என்பது ஆமை, 
அழகே வா அருகே வா ,
ஆறு மனமே ஆறு
தெய்வத்தாய்,-வண்ணக்கிளி சொன்ன மொழி ,
ஒரு பெண்ணைப் பார்த்து, 
இந்தப் புன்னகை
என் கடமை,-ஹலோ மிஸ் எங்கே போறிங்க 
இரவினில் என்ன
கை கொடுத்த தெய்வம்,-சிந்து நதியின் மிசை,
 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
கர்ணன், -  உள்ளத்தில் நல்ல உள்ளம், 
கண்கள் எங்கே,
என்னுயிர் தோழி
கறுப்புப் பணம்,-எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் , 
ஆடவரலாம்
காதலிக்க நேரமில்லை,-நாளாம் நாளாம்,
மலரென்ற முகமொன்று, 
அனுபவம் புதுமை
,நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா,
என்னப் பார்வை, 
உங்கள் பொன்னான கைகள்,
பச்சை விளக்கு,-ஒளிமயமான எதிர்காலம்,
கேள்வி பிறந்து அன்று
படகோட்டி,-தரைமேல் பிறக்க வைத்தான், 
தொட்டால் பூமலரும்,
பாட்டுக்கு பாட்டெடுத்து, 
என்னை எடுத்து
பணக்கார குடும்பம்,- அத்தை மகள் ரத்தினத்தை, 
ஒன்றுஎங்கள் ஜாதியே,
பறக்கும் பந்து பறக்கும் , 
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக 
புதிய பறவை,- உன்னை ஒன்று கேட்பேன், 
எங்கே நிம்மதி,
பார்த்த ஞாபகம் இல்லையோ , 
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சர்வர் சுந்தரம்,-அவளுக்கென்ன அழகிய முகம் ,
போகப் போக தெரியும்,
சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு 

       65 இல் வந்த படங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை,-நான் ஆணையிட்டால், 
நான் மாந்தோப்பில்,
குமரிப்பெண்ணின், 
மலருக்குத் தென்றல் பகையானால்
பணம் படைத்தவன்,-கண் போன போக்கிலே,
மாணிக்கத் தொட்டில்
சாந்தி,-யார் அந்த நிலவு, 
வாழ்ந்து பார்க்கவேண்டும்
வெண்ணிற ஆடை,-அம்மம்மா காற்று வந்து,  
கண்ணன் என்னும் மன்னன்,  
என்ன என்ன வார்த்தைகளோ,
சித்திரமே சொல்லடி
ஆயிரத்தில் ஒருவன்.-உன்னை நான் சந்தித்தேன்,
அதோ அந்த பறவை,
ஓடும் மேகங்களே,
ஏன் என்ற கேள்வி,
நாணமோ இன்னும் நாணமோ ,
பருவம் எனது பாடல்,
ஆடாமல் ஆடுகிறேன்.

                   ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் சிறப்பாக இருப்பது இயல்பானதே.மாறாக அனைத்துப் பாடல்களையும் அபாரமாக அமைப்பதென்பது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எந்தப் பாடலை எடுப்பது எதை வைப்பது என்ற குழப்பம் இதை எழுதும் போது எனக்கு ஏற்பட்டது. மேலும் இவர்களின் பல படங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. இருந்தும் மேற்குறிப்பிட்ட பாடல்களை வாசிக்கும் போதே அவற்றின் இனிமை நம்மை ஒரு சுகமான வாசம் போல குதூகலிக்கச் செய்கிறது.இந்தப் பாடல்களின் சுகம் தமிழ்த் திரையிசை இருக்கும் வரை இறவாமல் இங்கே தங்கி இருக்கும் என்பது உறுதி. ஒரு பாடல் எத்தனைப் பேரால் கேட்கப்படுகிறது என்ற பொருந்தாத வரைமுறையை வைத்துக் கொண்டு அந்தப் பாடலின் சிறப்பை தீர்மானிக்கும் முட்டாள்தனமான மனப்போக்கு நம்மிடம் வெகு அதிகமாக் காணப்படும் பொது புத்தி. உண்மையில் ஒரு பாடல் எத்தனை காலம் இங்கே கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே நாம் அதன் சிறப்பை வரைய முடியும். அப்படிப் பார்த்தால் 50 களிலும் 60 களிலும் வந்த பல பாடல்களே அந்தச் சிறப்புக்குரியவை என்பது தெளிவு.

      புதிய பறவை, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி,ஆனந்த ஜோதி, கர்ணன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் அத்தனைப் பாடல்களுமே தங்கச் சுவை கொண்டவை. குறிப்பாக (என்னுடைய தனிப்பட்ட விருப்பமான)வெண்ணிற ஆடை படத்தின் எல்லா பாடல்களும் வெகு நேர்த்தியானவை. கேட்பவரை ஒரு கணம் உறைய வைக்கும் குரலும், வியப்பூட்டும் மெட்டும்,தாலாட்டும் இசைக் கோர்ப்பும், பண்பட்ட கவிதை வரிகளும் "கண்ணன் என்னும் மன்னன் பேரை", "அம்மம்மா காற்று வந்து ஆடை", "என்ன என்ன வார்த்தைகளோ", "சித்திரமே சொல்லடி" போன்ற பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகின்றன. ஒரு ரசிகனின் மனதில் பற்பல வண்ணக் கோடுகளைத் தீட்டி ஒரு வானவில்லின் அனுபவத்தை அவனுக்கு கொடுக்கின்றன.படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் படப் பாடல்களை கேட்கும் எவருமே ஒரு மவுனமான தலை அசைப்பின் மூலம் அவற்றின் பெருமையையும் சிறப்பையும் தெரிவித்து விடுகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு சிறப்பு என்னவென்றால் இத்தனை ஆயிரம் பாடல்களில் எந்த இரண்டு பாடலும்  ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறான மெட்டில் அமைக்கப்பட்டு ஒரு  புதிய இசை  அனுபவத்தை கேட்பவருக்கு அளிக்கிறது.

   தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 60களை விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையாக மட்டும் பார்ப்பது முரணானது.மேலும் இது அப்போது தமிழ்த் திரையிசையில் இருந்த பல இசை மேதைகளுக்கு நாம் செய்யும் அநீதி. கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,எ எம் ராஜா, சுதர்சனம், சுப்பையா நாயுடு இன்னும் பல இசைஞர்களும் இதே பொற்காலத்தைச்  சேர்ந்தவர்கள்தான். வசதியாக அவர்களை நாம் மறந்துவிடலாகாது.

    பணத்தில் துவங்கி ஆயிரத்தில் ஒருவனில் தமிழ்த் திரையிசையின் ஒரு மாபெரும் இசைப் புரட்சி முடிவு பெறுகிறது.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிகிறார்கள். இதற்கு பல காரணங்கள் யூகமாக இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. ஸ்ரீதர் மற்றும் கண்ணதாசன் இருவருமே இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.  ஆனால் அந்தப்  பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் அவர்கள் எடுத்தவைத்தச் சுவடுகள் எல்லாம் ஒரு தங்க  இசையாக காற்றில் தவழ்கின்றன. இந்தச் சாதனை முறியடிக்கப்பட தமிழ்த் திரையிசை இரண்டாவது பொற்காலத்தை அடையவேண்டும். Good things might recur. But the best things never.

  மற்றொரு கவனிக்கத்தக்க அம்சத்தைப் பற்றி நாம் இங்கே பேசவேண்டும்.அது இவர்கள் தங்கள் இசையை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் பாடலைப் பாடியவர்களையும், அதை எழுதிய கவிஞனையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஒரு பாடலை  உருவாக்குவதில் தன் பங்களிப்பைச் செய்யும் எல்லோருக்கும் உரிய  இடம் கொடுத்து அவரவர் தன் பாதையில் பயணிக்கும் உரிமையை பறித்துக் கொள்ளாமல் ஒரு பண்பட்ட நாகரீகத்தை காப்பாற்றினார்கள். இதனாலேயே இன்று பலர் அவர்களின் பாடல்களில்  டி எம் எஸ், சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ்,டி ஆர் மகாலிங்கம், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் பி பி,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,மருதகாசி,கண்ணதாசன்,வாலி, எம் ஜி ஆர்,  சிவாஜி, ஜெமினி, நாகேஷ், சந்திரபாபு போன்றவர்களை அடையாளம்  காண முடிகிறது.அவரவர்க்கு செல்ல வேண்டிய சிறப்பை உரியவர்களுக்கு கொடுத்துவிடுவது ஒரு உன்னதமான இசையின் நற்குணம். அது அவர்களிடம் இருந்தது. இந்த மேன்மையான பண்பாடு அவர்களுக்கு அடுத்து வந்த இசைஞர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டது. "இது என் இசை" என்று கர்வம் மிளிர மேடையில் சுயபுராணம் செய்துகொள்ளும் ஒரு புதிய சீர்கெட்ட, தரங்கெட்ட கலாச்சாரம் அதன்பின்  தோன்றியது.

     " பாசம்"(62)படத்தில் வரும் "உலகம்  பிறந்தது எனக்காக"என்னும் ஒரு அற்புதமான பாடலை குறித்து இப்போது பேசலாம். இந்தப் பாடலின் வரிகள் ஒரு சுயநலவாதியின் குரல் போல இருந்தாலும் பாடலை கேட்கும் போது இது சுயநலமில்லை, மாறாக தன்னம்பிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மட்டும் நமக்குத் தெரிவதில்லை . கண்ணதாசன் துடிப்பாகத்  தெரிகிறார். டி எம் எஸ் குதூகலமாகத் தெரிகிறார்.எம் ஜி ஆர் பரவசமாகத் தெரிகிறார்.இதுவே ஒரு உண்மையான இசையின் முகம்.

        இன்றோ நாம் எதோ ஒரு இசை அமைப்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இது அவர் பாடல் என்று அழைப்பதோடு நின்றுவிடுகிறோம்.வேறு  சிலரோ  ஒரு பாடலை ஒரு குறிப்பிட்ட இசைஞரின் பாடலாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்வதுண்டு.அது உண்மையில்லை.மேலை நாட்டு இசைவிரும்பிகளிடம் இது போன்ற அபத்தமான இசைப் பார்வை கிடையாது. Pink Floyd, Led Zeppelin, The Who, Rolling Stones, Deep Purple, The Beatles, The Cars, Alan Parsons Project,   போன்ற  குழுக்களின்  பாடல்களை  அவர்கள் அந்தக் குழுவினரின் ஒருங்கிணைந்த இசையாகவே  எடுத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் எப்போதும் ஒரே ஒருவரை மையப் படுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளுவதில்லை. இதுதான் நாம் இசையை அணுக வேண்டிய முறை.இசையின் இந்தப் பன்முகத் தன்மையை மறுக்கும் எந்த இசைஞரும் தான் சுவாசிக்கும் இசைக்கு நியாயமாக இருக்கவில்லை என்பதே உண்மை.

Monday 13 July 2015

மெல்லிசை ஒன்று இன்று மௌனமானது.


என்ன எழுதுவது என்று தெரியவில்லை.































இந்த மௌனம்தான் என் இப்போதைய பதிவு.








சில தூக்கங்கள் துக்கமளிக்கின்றன.






Tuesday 7 July 2015

விஸ்வநாதன் என்னும் விலையில்லா இசைவிற்பன்னர்.

எம் எஸ் வி பற்றிய பல செய்திகள் கவலையை வேதனையோடு   ஊசி ஊசியாக நமக்குள் இறக்குகின்றன.

எம் எஸ் வி நலம் பெற வேண்டி ஒரு பிராத்தனை செய்வோம்.

எம் எஸ் வி போன்றோர் இல்லாவிட்டால் நாம் இன்று ரசிக்கும் இசைப் பாரம்பரியம் கிடையாது  என்பது நிஜம்.

இசையை ரசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, அது பாகவதரோ கே வி மகாதேவனோ,  இளையராஜாவோ, ரஹ்மானோ, தேவாவோ,, ஹாரிஸ் ஜெயராஜோ, அணிரூத்தோ ...

எம் எஸ் வி இல்லாத இசை உலகம் கற்பனையில் கூட ஒரு வண்ணமில்லாத வானவில்தான்.