Sunday 19 June 2016

திரைமுகம்



 ஒரு திரைப் படம் ஒருவரை ஈர்ப்பதன் பின்னே பல காரணிகள் இயங்குகின்றன. பெரிய அளவில் நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைத்தவர்கள், டீசர்கள், பெருத்துத் தெறிக்கும் பிரமாண்ட வியாபாரப் பொய்கள், விளம்பரங்கள், வாய்வழிப் பிரச்சாரங்கள், நேரத்தை கடத்தும் கணங்கள், சாகச மனோபாவங்கள்,.....

  எனக்கோ ஒன்றே ஒன்றுதான்.  படத்தின்  தலைப்பு.  அவ்வளவே. ஏனென்றால்  ஒரு  தலைப்பு என்பது அந்தத் திரைப்படத்தின்  முகம் போன்றது. அதைப் பார்த்ததும் அந்தப் படம் பற்றிய ஒரு வரைபடம் எனது கற்பனையில் உருவாகிவிடும். தலைப்பை வைத்து  படத்தின் கதையை தீர்மானிப்பதோ அல்லது படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற பூவா தலையா விளையாட்டோ இல்லாவிட்டாலும், தலைப்புகளின் மீது ஒரு மோகம் உண்டு. 

   நான் சந்தித்த வரை வெகு சிலரே ஒரு திரைப் படத்தின் தலைப்பைக் குறித்து சற்றேனும் சிந்தனை செய்கிறார்கள். அல்லது கவலை கொள்கிறார்கள். நான் குறிப்பிடுவது ஒரு படத்தின் தலைப்பை வைத்து படம் வெளிவரும் முன்னரே செய்யப்படும் அரசியல் பற்றியதல்ல. எப்படி ஒரு படத்தின் தலைப்பு ஒரு அழகியலின் வெளிப்பாடாக, முதிர்ச்சி பெற்ற பண்பாட்டுச் சிந்தனையின் குறியீடாக, நெஞ்சத்தில் தைக்கும் வெல்வெட் ஊசியாக, மனதில் கரையும் மயக்கமாக, அறிவு சார்ந்த மேதமையின் அடிக்கோடாக ஒரு திரைப் படத்தை அலங்கரிக்கிறது என்பதை குறித்தே நான் இங்கு பேச விழைகிறேன்.

   ஒரு படத்தின் தலைப்பு ஒரு குழந்தைக்குச் சூட்டும் பெயர் போன்றிருக்க வேண்டும்  என ஏ வி எம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் கருதியதாக  ஒரு தகவல் படித்திருக்கிறேன். ஒரு விதத்தில் அது உண்மைதான். தமிழ்த் திரையில், எனக்குத் தெரிந்தவரை, சொற்பமான சில இயக்குனர்களுக்கே இந்த வசீகரச் சிந்தனை வயப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீதர், கே பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள். கொஞ்சம் பாக்கியராஜையும்  இதில் சேர்த்துக்கொள்ளலாம். 

   மணாளனே மங்கையின் பாக்கியம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பணம், முதல் தேதி, பாசமலர், பார்த்தால் பசி தீரும் (இன்றுவரை இதன் பொருள் எனக்குப் புரியவில்லை) என அடர்த்தியான அறிவு தேவைப்படாத எளிமையான தலைப்புகளின் காலத்தில் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் சட்டென்று கவிதை பாடுகிறது. சிவந்த மண் சற்று யோசிக்கத் தூண்டுகிறது.  பெண், பாகியலஷ்மி, சித்தி, கற்பகம் என்றால் கடந்து போகும் ஒருவன் வெண்ணிற ஆடை என்றால் கொஞ்சம் தடுமாறி நிற்கிறான். முழுவதும் காதல் காற்று வீசும் திரைக்கதைக்கு  காதலிக்க நேரமில்லை என்று ரசிகர்களை சீண்ட ஸ்ரீதரால் முடிந்தது.  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், அழகே உன்னை ஆராதிக்கிறேன், தென்றலே என்னைத் தொடு என்று காதலை யாசிக்கும் நீளமான தலைப்புகளின் மத்தியில்    இளமை ஊஞ்சலாடுகிறது  மனதை சட்டென்று கட்டிப்பிடிக்கிறது.   நினைவெல்லாம் நித்யா என கவிதை பாட வந்த திரைப் படம் மிகக் கொடூரமாக தலைப்பை கொலை செய்தது.

       அதே சமயம் பாலச்சந்தரின் தலைப்புகள் வேறு வகை. கொஞ்சம் நமது மூளையிலுள்ள  நியூரான்களை துடிக்க வைக்கும் தலைப்புகள் அவரது பாணி. நூல்வேலி என்ற பெயரே என்னை அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது. ஆனால் வீட்டிலோ என் அம்மா ஒரேடியாக ,"இந்தப் படமெல்லாம் உனக்குப் புரியாது. போய் பிரியா படம் பாரு" என்று திசையை மாற்றிவிட, நீண்ட வருடங்கள் கழித்து ஆறு வருடங்களுக்கு முன்பு  எதோ ஒரு சேனலில் நூல்வேலியைப்  பிடித்தேன். நீர்க்குமிழி, எதிர்நீச்சல்,அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம்,   (The height of sarcasm?), மூன்று முடிச்சு, சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற தலைப்புகள் "படத்தோட ஹீரோ பேரையே தலைப்பா வச்சுடலாம்" என்ற மொழி வறட்சியின் மீது அடிக்கப்பட்ட ஆணிகள் என்று நினைக்கிறேன்.  தனது படத் தலைப்புகளில் கூட பாலச்சந்தர் மலர்ச்சியை கொண்டுவந்தவர்.  இரு கோடுகள் என்ற அவரது தலைப்பில் ஐன்ஸ்டீனின் relativity theory  ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க சற்று அவகாசம் தேவை. முயன்று பாருங்கள். புரியும்.

   அவள் ஒரு தொடர்கதை படத்தின் பெயரிலேயே ஒரு புதினம் இருப்பதை உணர்கிறீர்களா?   அந்தப் படத்திற்கு கவிதா? என்று தலைப்பிட்டு படம் எடுத்திருந்தால் கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். நல்லவேளையாக பாலச்சந்தர் கொஞ்சம், ஏன் நிறையவே என்று சொல்லலாம், உட்கார்ந்து படத்தின் தலைப்பை உருவாக்கும் இயக்குனர். தப்புத் தாளங்கள் அதன் பெயருக்காகவே அதிகம் விமர்சனம் செய்யப்பட்டது. எம் எஸ் வி  அதற்கு இசையமைக்க மறுத்ததும் படத்தின் இந்தத் தலைப்பினால்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

       நினைத்தாலே இனிக்கும் என்றாலே இளமை ததும்பும் நினைவுகள் ஒரு நீண்ட ரயில் போல தொடர்ச்சியாக நெஞ்சத்தில் கிளை பரப்பும். நிழல் நிஜமாகிறது  இன்றும் ஒரு கவிதையின் நீட்சி போலவே ஒலிக்கிறது.

       இதேபோல அழியாத கோலங்கள் என்னை பல நாட்கள் ஆட்டுவித்தது. மூடுபனி என்ற தலைப்பு ஒரு விதமான போதை தரும்.  மூன்றாம் பிறை பற்றி நம் மக்கள் அதிகம் பேசிக்கொண்டது அந்தப் படம் வந்தபிறகே என்று நினைக்கிறேன். இதில் என் உறவின சகோதரர்கள் ஆளாளுக்கு மூன்றாம் பிறைக்கு  விஞ்ஞான விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலு மகேந்திராவிடம் எனக்கிருந்த ஈர்ப்பு இப்போது விலகிவிட்டாலும், அவருடைய தலைப்புகள் ஒரு தனிரகம்.  அதை மறுப்பதற்கில்லை.

      பாலச்சந்தர் போன்றே பாரதிராஜாவிடமும் ஒரு நல்ல தமிழ் தாகம் இருப்பதை அவருடைய படத் தலைப்புகள் தெரிவிக்கத் தவறுவதில்லை. 16 வயதினிலே துவங்கி கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள் என அவரது படப் பெயர்கள் நிறைய தரமான தமிழும், கொஞ்சம் கவிதை வாசமும், ஜன்னல் வைத்த ஜாக்கெட் போல  கொஞ்சமாக  (கதையை) காட்டும்  கவர்ச்சியும் கொண்டவை. அலைகள் ஓய்வதில்லை என்று பாரதிராஜா ஆரம்பித்து வைக்க  அதன் பின் அதே போன்ற இலக்கிய வாசம் எகிறி அடிக்கும் தலைப்புக்கள்  அப்போது தொடர்ச்சியாக வந்து இலக்கியம் இன்னும் வேணுமா என்று கேட்டன.  உதாரணமாக பயணங்கள் முடிவதில்லை, ராகங்கள் மாறுவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை...  இது ஆவறதில்லை  என்று சராசரி ரசிகன் விலகிப் போய்விட்டதால் விட்டார்கள். ஒரு சமூகத்தின்  பண்பாட்டுச் சித்திரங்களும், நாட்டார் மரபுகளும், மக்களின் எளிமையான வாழ்க்கை முறையும் இந்த ஒரே தலைப்பில் அமிழ்ந்திருப்பதாக நினைக்கிறேன். அது மண் வாசனை. தமிழின் மிகச் சிறந்த படத் தலைப்புகளில் ஒன்று. ஆனால் வாலிபமே வா வா என்று இதே பாரதிராஜாவுக்கு தோன்றியது ஒரு ஆபாச விபத்து.

   கடலோரக் கவிதைகள், கடல் பூக்கள் என்று சிந்திக்க கொஞ்சமாவது தமிழ்த் தேடல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கதாநாயகனின் பெயரைத்தாண்டி சிந்தனை ஓடாது. இல்லாவிட்டால் நல்லவன், கெட்டவன், பொல்லாதவன், வேட்டைக்காரன், படிக்காதவன் என்ற  beaten - track  ஒன்றே வழி. 

   பாரதிராஜா பள்ளியிலிருந்து வந்த பாக்கியராஜ் தன் ஆசான் போலவே சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள் என்று நன்றாகத் துவங்கினார். தூறல் நின்னு போச்சு அதிகம் பாராட்டப்பட்ட தலைப்பாக அப்போது இருந்தது. பிறகு முந்தானை முடிச்சு என்று  சற்று தடம் மாறினார். தாவணிக் கனவுகள் என்ற சிறிய ஒத்தடம் கொடுத்துவிட்டு பின்னர் சரசரவென கீழிறங்கினார்.  சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு (அவர் இயக்கிய படம் இல்லை என்றாலும்), ஆராரோ ஆரிரரோ, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி... என்று துவக்கத்தில் தன்னிடமிருந்த தரமான தமிழை தூர விரட்டினார்.  சொல்லப்போனால் நகை முரணாக பாரதிராஜா வகையறாக்கள் வந்த பின்னரே தமிழில் மகா கேவலமான படு திராபையான தலைப்புகள் சாத்தியமாயின. ஏ  வி எம்மின் சின்ன வீடு என்று விளம்பரம் வரும் என  அறுபதுகளில் யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். குழந்தைக்கு சூட்டுவது  போன்று திரைப் படங்களுக்கு பெயர் வேண்டும் என்று விரும்பிய நிறுவனம் கடந்து வந்த வணிகப் பாதையில் இந்த இடறல், சறுக்கல், தவிர்க்கமுடியாத ஒரு வியாபார சமரசம்.

      நல்ல தலைப்புகள் பற்றி பேசும் சமயத்தில் கண்ணைச் சாய்த்து கடந்து செல்ல முடியாத ஒருவர் இயக்குனர் மகேந்திரன். முள்ளும் மலரும் என்ற தலைப்பு இன்று வரை தமிழில் வந்த மிகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது.  அந்தத் தலைப்பை சற்று நிதானமாக ஆராய்ந்தால் அதனுளில் இருக்கும் இலக்கியச் சுவையை அறியலாம். அதை நீங்கள் எப்படி உள்வாங்கினாலும் படத்தின் கதைக்கேற்றபடியே அது பொருந்துவதை நீங்கள் காணலாம். One of the most classic titles.

   நெஞ்சத்தைக் கிள்ளாதே (பின்னாட்களில் இதயத்தை திருடாதே) நண்டு (எந்த இயக்குனருக்கும் தோன்றாத ஒன்று), ஜானி என்று  மகேந்திரனும் கொஞ்சம் சறுக்கினார். இருந்தும் தமிழின் ஆகச் சிறந்த தலைப்புகளில் ஒன்றான உதிரிப்பூக்கள் அவர் பெயரை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும். எனது பார்வையில் உதிரிப்பூக்கள் போன்றதொரு தலைப்பு ஒரு மகா மகா ஆச்சர்யம். காவியத் தலைப்பு. இதற்கு சற்றேனும் இலக்கியப் பரிச்சயம் அவசியம். புதுமைப் பித்தனின் சின்னம்மா (என்று நினைக்கிறேன்) உதிரிப்பூக்களாக மலர நிறைய வாசிப்பும் நிறைய யோசிப்பும் கண்டிப்பாகத் தேவை. மகேந்திரனிடம் அவை இரண்டுமே இருந்தன என்று தெரிகிறது.  கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுத்து, ஊர் பஞ்சாயத்து என்று தமிழ் சினிமாவின் சாபத்திலிருந்து மகேந்திரனும் தப்பவில்லை.  இறுதியாக சாசனம் என்று கொஞ்சமாக அந்தப் பழைய மகேந்திரனை காண முடிந்தது. பிறகு தெறி என்ற வணிக அபத்தத்தில் தோன்றி காணாமல் போனார்.   தமிழின் மிகச் சிறந்த ஒரு படைப்பாளி இன்றைய வணிக வெற்றியின் குறியீடான  விஜய் போன்றவர்களின் வில்லனாக நடிக்க வேண்டியது ஒரு  துர்பாக்கியம். இன்றைய தலைமுறை இனி அவரை இப்படித்தான்   பார்க்கும் என்று கவலையாக இருக்கிறது.

  ஒரு தலை ராகம் என்று படம் எடுத்த ராஜேந்தர் பின்னர் ரயில் பயணங்களில், வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம்,(நெஞ்சில் ஓர் ஆலயம் பாதிப்பு) ராகம் தேடும் பல்லவி என்று வெற்றிக் கனி சுவைக்காமல் பின்னர் தடாலடியாக உயிருள்ளவரை உஷா வென லோக்கல் பாணியில் இறங்கி வர சூடு பிடித்தது அவருடைய சினிமா. இதற்கிடையில்  பன்னீர் புஷ்பங்கள், பாலைவனச் சோலை, நெஞ்சமெல்லாம் நீயே என்று தமிழ் சினிமாவுக்கு சற்று ஆக்சிஜன் செலுத்தப்பட, அதுவுமே கொஞ்ச காலமே.

    உச்ச கட்டம் என்று ராஜ் பரத் என்பவர் ஒரு திர்ல்லர் கொடுக்க, தொடர்ந்தது அவருடைய  கவிதை சொட்டும் தலைப்புக்கள் சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள் பின்னர் தொட்டால் சுடும் என விரிய  நான்கே படங்களில்  தனது அடையாளம் இழந்தார்.

     தமிழ் சினிமாவின் தலைப்புகள் இன்றைய தேதியில் தனது சுயத்தை இழந்து விட்ட ஒரு விலாசம். மீண்டும் திருவிளையாடலும் மர்ம யோகியும், பில்லாவும், தசாவதாரமும், தில்லு முல்லுவும் தோன்றிக்கொண்டே இருக்கும் கற்பனை வறட்சியின் நீட்சி.

   தமிழுக்கு புதிய ரத்தம் செலுத்திய மணிரத்னம் தனது படங்களுக்கு அவ்வளவாக சிரத்தையுடன் தலைப்புகள் வைப்பதில்லை என்று நான் நினைக்கக் காரணம் (பகல் நிலவு, அக்னி நட்சத்திரம்,தவிர), நாயகன், இதயத்தை திருடாதே, தளபதி, அஞ்சலி, ரோஜா, திருடா திருடா, கன்னத்தில் முத்தமிட்டால் (இதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்காவது தெரியுமா) கடல், ராவணன், காதல் கண்மணி போன்ற மிக மலிவான அபத்தமான தலைப்புகள்தான். கொஞ்சமும் நேரம் செலவழிக்க விரும்பாமல் எதோ ஒரு சொல்லை  படத்தின் தலைப்பாக வைப்பதிலிருந்து மணிரத்னம் இன்னமும் மீளவில்லை. இருவர் என்ற தலைப்பில் ஒரு காவியத் தொடுகை இருந்ததை இப்போது சற்று எண்ணிக்கொள்கிறேன். பம்பாய், உயிரே படங்களுக்கு அந்தத் தலைப்புகள் மிகப் பெரிய அவமானம்.

     எம் எஸ் வி எண்பதுகளில் ஒரு திரைப்படம் தயாரித்தார். படத்தின் பெயர் என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. அது சில்க் சில்க் சில்க்... நான் மிகவும் மதிக்கும் நபர் எம் எஸ் வி என்பதற்காக அவருடைய இந்தத் தேர்வை நான் நியாயப்படுத்தி எனது  வார்த்தைகளை விரயம் செய்ய மாட்டேன்.  மிக மிக மோசமான தலைப்பு. படம் ஊற்றிக்கொண்டதால் எம் எஸ் வி வியாபார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டார் என்று பின்னர் அறிந்தேன். எப்படி எம் எஸ் வி போன்ற இசையின் அதிசயங்கள் நடைமுறை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்கு அடிமையாகிறார்கள் என்பது விஷம் தரும் வலி. இடறல் இல்லாமல் நடை பயில முடியாது என்ற உலக உண்மை ஒன்றே இதற்கான வலி நிவாரணி.

    நாயகனின் பெயரோ. அவனுடைய குணாதிசயங்களில் ஒன்றோ, அவன் புகழ் பாடும் எதோ ஒரு கண்றாவியோ,  பேச்சு வழக்கு சொற்களோ, கொச்சை வார்த்தைகளோ தலைப்புகளாக மாறுவதில் இருக்கும் வசதியும் விரைவும் அற்புதமான தமிழ் சொற்கள் மீண்டும் வருவதை தடை செய்வதாக உணர்கிறேன். கண்ணியமான தலைப்புகளும், தரமான கவிதை கொண்ட பாடல்களும் இப்போதைய மிகத் தீவிரத் தேவை.   இல்லையென்றால் போடா போடி, தெறி, தெனாவெட்டு, மங்காத்தா போன்ற அருவருப்புகளும், ராசா ரோசா, மானே தேனே, ராஜா கூஜா, பூவு நீவு, எசப்பாட்டு நிப்பாட்டு போன்ற கருமாந்திரங்களும் மறுபடி படையெடுக்கும் ஆபத்து  அடுத்து நிகழக் காத்திருக்கிறது. இளையராஜா காலம் முடிந்து விட்டதால் நமது தமிழ்ப் பாடல்களுக்கு இனி அவ்வகையான சித்ரவதைகளும், கொடூரங்களும் நடக்கப்போவதில்லை என்றாலுமே அவர் துவக்கி வைத்த "அந்தத் திருப்பணியை" தொடர்ந்து செய்ய யாரேனும் முயலக்கூடிய வாய்ப்பு இன்னுமிருக்கிறது.

     இன்றைய தரை லோக்கல் சூழலில் (முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, நாங்கல்லாம் அப்பவே அப்படி, மிளகா, இன்ன பிற அவஸ்தையான பெயர்கள்..) இன்னும் சற்றேனும் தமிழ்த் தனம் குறையாமல், ஒரு சதவிகிதமாவது கவிதை புனைந்த வார்த்தைகளோடு தனது படங்களுக்குப் பெயர் சூட்டும் ஒரே இயக்குனர் கௌதம் மேனன் ஒருவரே. மின்னலே, காக்க காக்க, போன்ற இரண்டு சமரசங்களை தள்ளி வைத்துவிட்டால், பின்னர் நமக்குக் கிடைப்பது ஒரு நல்ல தமிழ் கொண்ட தலைப்புகள். வாரணம் ஆயிரம், நீதானே என் பொன் வசந்தம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால்  (நல்ல கவிதை வரியை தன் படத் தலைப்பாக தேர்ந்தெடுப்பது ஒரு விதத்தில் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.) என்னை நோக்கிப் பாயும் தோட்டா போன்ற தலைப்புகள்  நல்ல தமிழ் நோக்கி நமது திரையுலகம் நகர்வதின் அடையாளமாகத் தோன்றுகிறது.

      தனிப்பட்ட விதத்தில் தமிழின் மிகச் சிறந்த தலைப்புகள் எவை என்ற கேள்வி என்னை நோக்கிப் பாய்ந்தால் எனது பதில்;

மண் வாசனை, 
நூல்வேலி, 
உதிரிப்பூக்கள்......

   ஒரு கவிதையின் கடைசி வரி போன்ற தலைப்புகள் தமிழ்த் திரையில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை இன்னும் என்னிடமிருக்கிறது.

   









தொடர்வது ; இசையுதிர்காலம் இரண்டு 

Thursday 2 June 2016

வவ்வாலின் வருகைக்காக .....

இணைய நட்பு என்பது ஒரு விதத்தில் ரயில் சிநேகிதம் போன்றது. ஆத்மார்த்தமான நட்பு இதில் ஒரு அதிசயம்.  தாமரை இலைத் தண்ணீர்த் துளி போல இணையத்தில் நாம் இணைந்திருந்தாலும் சில விதிவிலக்குகள் நேர்வதுண்டு.

நான் பதிவுகள் எழுதும் முன் இணையத்தில் சந்தித்த பலரில் இருவர் முதன்மையானவர்கள்.  முதல் நபர்  திரு அமுதவன். நான் எழுதவேண்டும் என்ற உள் சிந்தனையை உருவாக்கியது அவரது எழுத்து. இரண்டாவது நபர் வவ்வால். நான் பொறாமை கொண்ட பதிவர்.

வவ்வாலுக்கும் எனக்குமான இணையத் தொடர்பு ஒரு முட்டலில் உருவானது. துவக்கத்தில் இணையத்தில் ஆங்கிலப் பாடல்களை தேடித் தேடி தரவிறக்கம் செய்த காலங்களில் நான் அதிகம் தமிழ்ப் பதிவுகளை வாசித்ததில்லை. அப்படி வாசித்த சில பதிவுகளும் வெற்று எழுத்து கொண்ட வெறும் சக்கைகளாக இருந்தன. அது என் தேடலின் குறை என்று இப்பொழுது அறிகிறேன்.

இதற்கிடையில் சமுத்ரா என்பவரின் வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்ற வலைப்பூவில் ஒரு குறிப்பிட்ட பதிவில் நான் அந்தப் பதிவரின் எழுத்து நடை குறித்து "இது சுஜாதாவின் பாணி போல தெரிகிறது" என்று எழுத, அவருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எனக்குப் பதிலளிக்கும் ஆவேசம் அவரை "சுஜாதா எனக்கு முன்னே வந்துவிட்டார். அவ்வளவுதான் வித்தியாசம்" என்று எழுதுமளவுக்கு விரைவாக செலுத்திவிட்டது. இந்த பின்னூட்ட கைகலப்பில் வவ்வால் சேர்ந்துகொண்டார். பதிவர் சொன்னதை ஆமோதித்த அவர் "காரிகன் என்ற பெயர் நான் சிறு வயதில் படித்த ஒரு காமிக்ஸ் கதாநாயகனின் பெயர். அவர் அப்படித்தான் எழுதுவார் போலும்". என்று தனது டிரேட் மார்க் நையாண்டியுடன் அவர் குறிப்பிட, நான் வவ்வாலுக்கு "உங்கள் பெயரில் கூட தலைகீழாக தொங்கும் ஒரு வினோத ஜந்து உள்ளது" என தெரிவிக்க அங்கே  நிகழ்ந்து முடிந்தது எங்களது முதல் சந்திப்பு.

அந்த முழு பதிவுக்குமான இணையத் தொடர்பை கீழே கொடுத்துள்ளேன். திரு. சமுத்ரா உண்மையில் மிகத் திறமையான எழுத்தாளர். சுஜாதா பாணியிலிருந்து மீள முடியாவிட்டாலும் அவர் எழுதும் அறிவியல், இன்றைய இணையத்  தமிழுக்கு மிக அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன்.

 http://samudrasukhi.blogspot.in/2012/03/blog-post.html


பின்னூட்டங்களிலேயே எனது பொழுது கழிந்த வருடங்களில் அடிக்கடி இணையத்தில் பலருடன் முரண்படுவது எனக்கு நேர்ந்த ஒரு பொழுதுபோக்குச் சுமை. இரா பதிவர்களுடன் முட்டி மோதிய தருணங்கள் நிறையவே உண்டு.

பின்னொரு தளத்தில் உலக சினிமா ரசிகன் என்பவர் கமலின் ஹே ராம் பற்றி ஏதோ மாடர்ன் ஆர்ட் ஒன்றை விவரிப்பதுபோல frame by frame சிலாகித்து எழுத, பொறுமை உடைந்துபோன  எனது விரல்கள் அங்கே மற்றொரு உரசலை உருவாக்கின. அது ஒரு மிகக் கடுமையான விவாதமாக தொடர்ந்து கொண்டிருக்க, இடையில் அவரோ என்னை சினிமா தொடர்புடைய வேறு யாரோ என்று கற்பனை செய்துகொண்டு ஆக்ரோஷமான வார்த்தைப் போரில் ஈடுபட, நானும் ஏவுகணைகள் அனுப்ப, விவாதம் வேறு தளங்களுக்கும் பரவியது. அதையும் அவரே செய்துமுடிக்க இரண்டாம் முறை நான் வவ்வாலை உலக சினிமா ரசிகனின் தளத்தில் சந்திக்க சேர்ந்தது. இந்தமுறை வவ்வால் ஒரு திடீர் அதிசயமாக என் சார்பாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். "காரிகன் ஒருவரின் பெயரை வைத்தே அவரை அறிந்துவிடக்கூடியவர்"  என்று எனக்கே தெரியாத உளவியலை வெளிப்படுத்தி என்னை ஆச்சர்யப்படுத்தி," ஹே ராம் படத்தில் எங்கெல்லாம் கமல் குறியீடுகளை பயன்படுத்தியிருக்கிறார் என்று தெளிவாக மற்றொரு பதிவு எழுதினால் நான் எங்கே அவைகளை கவனிக்கத் தவறினேன் என்பதை அறிய வசதியாக இருக்கும்" என்று அதிரடியாக சொல்ல, உலக சினிமா ரசிகன்,"சரிதான். ஏழரை உச்சத்தில் இருக்கிறது போல" என விலகிச் சென்றுவிட்டார்.  (இப்போது அந்தப் பதிவை காணவில்லை. உலக சினிமா ரசிகன் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.)

வவ்வாலின் பின்னூட்டங்கள் அதிரடியானவை, அவை அதிகம்  ஆர்ப்பாட்டம் மிகுந்த  தெளிவான நக்கல், நையாண்டி கலந்த  சொற்களோடு வரும் ஒரு கலவரக் கதம்பம். வரிக்கு வரி சுவாரஸ்வம் தெறிக்கும். வவ்வாலின் forte அதுதான். அவரால் வெகு எளிதாக கலோக்கியல் சொற்களோடு  வாதம் செய்ய முடியும். அதேவேளையில் சடாரென எதிர்பாரா வளைவில் திரும்பி புத்தகத் தமிழில் உரைநடை பாணியில் தரமான தர்க்கம் புரியவும் முடியும். வாதம் என்று வந்துவிட்டால் இடையில் I quit என்று சீட்டுக்களைக் கலைத்துபோடும் முட்டாள்தனமான தற்காப்பு நாடகத்தனமோ, அல்லது விவாதத்தில் பாதியில் கரைந்துபோகும் கோழைத்தனமோ கொஞ்சமும் இல்லாத இறுதி வரை நின்று தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளுக்கு ஸ்கட் மிஸைல் அனுப்பும் அயராத ஆளுமை கொண்டவர். தனது எழுத்தில் எந்த இடத்திலும் சோர்வையோ அலுப்பையோ அல்லது வெறும் சம்பிரதாயமான கை குலுக்கல் செயற்கை பிம்பங்களோ தலை காட்டவிடாமல், அவர்  எழுதும் வார்த்தைகள் அனைத்தும் அவர் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளாகவே இருக்கும்.

அவரது பதிவுகள் மிக நீண்டவை. பல இணையத் தொடர்புகள் சூழப்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் பாணி. சில சமயங்களில் சற்றே அலுப்பூட்டினாலும்  பல விஷேச தகவல்களை அங்கங்கே அடிக்கோடிட்டு காண்பித்துச்  செல்லும் அவர் எழுத்து.  ஒரு கலைடாஸ்கோப் ஒவ்வொரு அசைவுக்கும் வினோத அழகாக உருமாறுவதைப் போன்ற  வசீகரம் மிக்க கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் சிறப்பு.

அவருடைய பின்னூட்டங்களை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு என் பதிவு ஒன்றில் அவரது திடீர் வருகை ஒரு வசந்தம் போல உவகை அளித்து, திகைப்பில் திக்குமுக்காட வைத்தது. அது நிற்காத மழை என்ற தலைப்பில் நான் எம் எஸ் வி பற்றி எழுதிய பதிவு.

http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கைந்து பதிவுகளில் அவர் வருகை இருந்தது.  எதிர்பார்த்த சில பதிவுகளில் அவர் தோன்றுவதில்லை. என் வலைப்பூ பக்கம் வராவிட்டாலும் நான் அவரைத் தொடர்ந்தபடியே இருந்தேன். இடையில் நண்பர் வருண், நண்பர் ஜெயதேவ் தாஸ், வவ்வால் மூவருக்குமிடையில் ஒரு சிறிய புள்ளியில் ஒரு விவாதம் தோன்றி அது கன்னாபின்னாவென்று காட்டுத்தீ போல உக்கிரமாக கொழுந்துவிட்டு எரியத் துவங்க அமுதவன் அவர்கள்  தனது தளத்தில் பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள் என்று ஒரு பதிவே எழுதுமளவுக்கு தகித்தது.

நான் இறுதியாக வவ்வாலின் பின்னூட்டத்தை கண்டது  இந்த களேபரங்களுக்குப் பிறகு  நண்பர் ஜெயதேவ் தாஸ் பதிவு ஒன்றில்தான். அதன் பின் வவ்வால் ஒரு மர்மம் என எனக்குத்  தெரிய ஆரம்பித்தது. நெய்வேலி புத்தகத்  திருவிழா பற்றிய அவரது பதிவே இன்று அவரது இறுதிப் பதிவாக இணையத்தில் இருக்கிறது.

இணையத்தை விட்டு திடுமென அகன்று விட்ட வவ்வால் ஒரு மகா ஆச்சர்யமானவர். அவரது பாராட்டில் ஒரு ஆத்மார்த்தமான தோழமையைக் கண்டேன். ஒருமுறை வலைச்சரத்தில் என் வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டபோது  அவர் என்னைக் குறித்து எழுதிய பின்னூட்டத்தில் அவரது அன்பு வெறும் டிஜிடல் சங்கதி  கிடையாது என்பதை புரிந்துகொண்டேன்.

அவரை நேரில் சந்திக்கும் அந்த கணம் தோன்றப் போவதில்லை என்று தெரிகிறது. அது பற்றி கவலையில்லாவிட்டாலும், இணையத்தில் அவர் எழுத்துக்களை மறுபடியும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அடர்த்தியாக எனக்குள் ஒரு புயல்  போல அசைகிறது. அவரது பழைய எழுத்துகளைப் படிக்கும் போது எத்தனை அருமையான தோழனை இழந்திருக்கிறேன் என்று ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வவ்வாலின் நண்பர்கள் மற்றும் அவரை இணையத்தில் அறிந்தவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் வார்த்தைகளின் வலி புரியும் என்று நம்புகிறேன்.

வவ்வாலின் இரண்டரை வருட திடீர் மௌனம் பல எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும்,  கொஞ்சம் கொஞ்சமாக உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மௌனம் பல திகைப்புகளையும் , அச்சங்களையும்  மனதில் எழுப்புகிறது.

இந்த மௌனம் ஒரு நட்புக்கினிய நண்பனின் பிரிவை உணர்த்துகிறது. எங்கிருந்தாலும் அவர் நலமாக இருக்கவேண்டும் என்ற வாழ்த்து எப்போதும் என்னிடமுண்டு.

வவ்வால் மீண்டும்  வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நீண்ட பதிவாகக் கூட வேண்டாம். ஒரு சிறிய பத்தியாக, ஒரு வாக்கியமாக, ஒரு வார்த்தையாக  அல்லது ஒரே ஒரு எழுத்தாக ....